வியாழன், 29 மே, 2014

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - தமிழ் பெற்ற இடம் ஒரு பார்வை

பத்தாம்வகுப்புத் தேர்வு முடிவுகள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. .மாநிலத் தேர்ச்சி 90.7% சதவிகிததிற்கு மேல் .
499 மதிப்பெண்களை 19 பேர் பெற்றுச்  சாதனை. தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவர்கள்! .அரசுப்பள்ளிகளில் அபார சாதனை செய்த மாணவச்செல்வங்கள் ..  எவ்வாண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சில  மாணவர்கள் 500-க்கு 500மதிப்பெண் பெற்று வியத்தகு வெற்றி! தேர்வு முடிவுகள்..தேர்தல் முடிவுகளைப் போலவே பரபரப்பு ...தோல்வியடைந்த சிலருக்கோ வாழ்க்கையே முடிந்துவிட்டதைப் போன்ற விரக்தி....

சாதனை படைத்த..... மாணவர்களுக்குப் பின்னால் கடுமையாக உழைத்த ஆசிரியர்களுக்கும்,மாணவர்தம் பெற்றோர்களுக்கும் ,அர்ப்பணிப்பு உணர்வோடு வழிகாட்டிய கல்வி அலுவலர்களுக்கும் வாழ்த்துகள்.....!!
....இந்தத் தேர்வு முடிவுகள் சில கேள்விகளை ..சில ஐயங்களை ..சில அதிர்வு அலைகளை.....நம் மனங்களில் உண்டாக்கியுள்ளது..மாநிலம் முழுதும் மற்ற படங்களைக் காட்டிலும் தமிழில் தேர்ச்சி குறைவு..மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்று ,தமிழில் மட்டும் தோல்வி அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். 
சில ஐயங்கள்.....
  • தமிழ்ப் பாடத்தைவிட அயல்மொழியான ஆங்கிலத்தில் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. மாணவர்களுக்குத் தமிழ் படிப்பதைவிட ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற பாடங்கள் படிப்பது எளிமையாகிவிட்டதா...!?
  • தமிழ்ப்பாட வினாவமைப்பு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப்  புரியும்படியாக இல்லையா?
  • தமிழாசிரியர்களின் கற்பித்தல் திறன் இன்னும் மேம்பட வேண்டியுள்ளதா?
  தமிழாசிரியர்களின் நிலை...
'தமிழ் தானே'என்ற பிற பாட ஆசிரியர்களின் அலட்சியம்..தமிழ் மதிப்பெண்கள் உயர்கல்விக்கு உதவாது என்ற அவலம்.? பிழைகளையே கற்றுக்கொடுக்கும் ஊடகங்களின் ஆதிக்கம்..வீட்டிலும் வெளியிலும் அன்னியப்பட்டு நிற்கும் அன்னைத்தமிழின் நிகழ்கால நிலவரம்...இவற்றையெல்லாம் கடந்து தமிழாசிரியர்கள் தாங்கள் பணியைச் செய்யவேண்டியுள்ளது.
"புதுமைப்பித்தனைக்கூடத் தெரியாத தமிழாசிரியர்கள்...! இன்றைய தமிழாசிரியர்கள் வார,மாத இதழ்களைக்கூடப் படிப்பதில்லை...?!"...என்ற நாஞ்சில்நாடன்,ஜெயமோகன் போன்ற படைப்பாளிகளின் குற்றசாட்டுகள்     இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்று மறுப்பதற்கில்லை. மற்ற பாடங்களுக்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாடு என்ன...?மற்ற பாடங்களை வாழ்க்கைக்குக் கற்றுக்கொடுக்கிறோம்..ஆனால் தமிழ்ப் பாடத்தில் மட்டும்தான் வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கிறோம்... வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கும் தமிழாசிரியர்கள் வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரிதானே...! இதனைத் தமிழாசிரியர்கள் அனைவரும் சிந்திக்கவேண்டும்.. 
     ஆனால் தமிழாசிரியர்கள் புத்தகங்களை வாசித்து,  மாணவர்கள் மனத்தில் பதியுமாறு பாடம் நடத்துவது என்பது வேறு; தேர்வில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பது வேறு என்ற நிலையை இந்தத் தேர்வு முடிவுகள் காட்டுகிறது?! 
   தமிழ்ப்  பாடத்தில் தேர்ச்சி பெறவைக்க , கற்பித்தலை விட பயிற்சி அவசியம்! என்ற நிலை.. இல்லை... இல்லை... பயிற்சி மட்டுமே போதும் என்ற நிலை வந்துவிட்டதோ என்ற ஐயம் ஏற்படுகிறது..! 

வினாத்தாள் குளறுபடிகளும், தேவையான மாற்றங்களும்:
     தமிழ் இரண்டாம் தாளில் ஏகப்பட்ட உட்பிரிவுகள். மெல்லக் கற்கும் மாணவர்கள் வினாத்தாள் அமைப்பையே புரிந்துகொள்வது மிகக்கடினம்.. எளிதாக மதிப்பெண் எடுக்க முடியும் என நினைத்த படிவம் நிரப்புதல் வினாவும் மெல்லக் கற்போர் புரிந்து கொள்ள இயலாதபடி இவ்வாண்டு வினா கேட்கப்படிருந்தது.......!
     
   வினாத்தாள் திட்ட வரைவின் படி அமையாத வினாத்தாள்கள்,, ஒரு மதிப்பெண் வினாக்களைக் கூட உள்ளிருந்து எடுப்பது.., வாழ்கைச் சூழலுக்கு விடை அளித்தல் பகுதியில் கூட எளிமை இல்லாமை.......
         முதல் தாள், இரண்டாம் தாள் என இருநூறு மதிப்பெண்களுக்குப் படிக்க வேண்டிய சுமை... இவை எல்லாம் அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய பின்தங்கிய மாணவர்களுக்குச் சவாலான விஷயங்கள்!.. 
தீர்வை நோக்கி...
    இவ்வாண்டு 10, 12ஆம் வகுப்பு அரசுத்தேர்வுகள் நடத்துவதில் புதிய புதிய மாற்றங்கள்.. வினாத்தாள் கட்டுக்களை காப்பாளரிடமிருந்து பெற்று வருவது என்ற பழைய நடைமுறை மாறி,, வினாத்தாள்களைத் தேர்வு முகாமிற்கே கொண்டு சேர்த்தது: நேர மாற்றம்: மாணவர் தேர்வு எண் போன்ற விவரங்களை விடைத்தாளில் எழுதவேண்டிய அவசியம் இல்லாமல் செய்தது.(விடையை எழுதினால் மட்டும் போதும் ).. போன்ற அதிரடி மாற்றங்கள், ஆரம்பத்தில் ஆசிரியர்களின் உள்ளத்தில் குழுப்பத்தை ஏற்படுத்தினாலும் பின்பு, அது அனைவருக்கும் பணிச் சுமையைக் குறைத்ததை அறிந்து அனைவருக்கும் மகிழ்ச்சியே..! இதனால் ஒரு சிறிதும் தவறுக்கு இடம்தராமல்,நேர்மையான விடைமதிப்பீடு நடந்துள்ளது. இந்த அவசியமான மாற்றத்தை ஏற்படுத்திய இயக்குனர் மற்றும் அலுவலர்களுகளைப் பாராட்டவேண்டும் !.
    இதைப்போலவே சரியான மாற்றத்தை வினாத்தாள் வடிவமைப்பிலும்  செய்தால் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
    தமிழாசிரியர்கள் இல்லாத பள்ளிகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
    மற்ற பாட ஆசிரியர்களும் தமிழின் அவசியத்தை உணர்ந்து,கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டும்.
    பணி நிரவல் செய்யும்போது தமிழ்ப்பாடத்தைக் கடைசியாக வைத்துக் கணக்கிடுதலை மாற்ற வேண்டும்.
    அறிவியல் பாடதைப்போல தமிழுக்கும் அக மதிப்பெண் வழங்குதல் வேண்டும்.
    தமிழாசிரியர்களும் தன் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். மதிப்பெண் பெற வைப்பதோடு,மாணவர்களை மனித நேயம் உள்ளவர்களாக மாற்றும் பணியில் நம்மை அற்பணிப்போம்.     
   தமிழால் தகுதி பெற்று,தமிழுக்குத் தகுதி சேர்ப்போம்!!   
 இதே பொருள் பற்றிய நண்பர்களின் வலைப்பூவிலும் செல்ல.......

  http://valarumkavithai.blogspot.com/2014/05/blog-post_26.html
http://gurunathans.blogspot.in/2014/05/blog-post_28.html

 

 

14 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா
    தேர்வு முடிவில் தமிழ்ப்பாடம் பின் தங்கியதற்கான நடைமுறை காரணங்கள், மாற வேண்டிய தமிழாசிரியர் தங்களை மாற்றிக் கொள்வதற்கு இதுவே சரியான தருணமெனும் சுட்டிக்காட்டல், அரசு வைத்துள்ள சரியான கோரிக்கைகள் என பலதரப்பட்ட விடயங்களை நேர்த்திய வடிவமைத்திருக்கும் கட்டுரை வெகு சிறப்பாக வந்துள்ளது ஐயா. படிப்பது போலவே நான் உணரவில்லை என்னிடம் நீங்கள் நேரில் பேசிய உணர்வு. மாற்றத்திற்கான வழிதடத்தில் இணைந்து பயணிப்போம். நன்றீங்க ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! மாற வேண்டியதை, மாற்றுவதற்காக தொடர்ந்து முயற்சிப்போம்.!இணைந்து, குரல் கொடுப்போம்!.
      "தட்டுங்கள் ஒரு நாள் திறக்கப்படும்". கட்டுரை நேர்த்தி பற்றி எழுதியிருந்தீர்கள்.மனத்தில் பட்டதை எழுதியுள்ளேன்.மற்றபடி நேர்த்திஎல்லாம் இன்னும் வரவேண்டும். ரொம்ப நன்றிங்க ஐயா.

      நீக்கு
  2. அருமை சுந்தர் அய்யா. “நூறு பூக்கள் மலரட்டும்“ என்று சும்மாவா சொன்னார் மாஓ? எத்தனை வகையான கவலைகள்? எத்தனை வகையான தீர்வுகள். நான் ஒன்று எழுத, நம் குருநாதசுந்தரம் மற்றொரு பாணியில் எழுத, இதோ நீங்கள் உங்கள் பாணியில் ஆனால் நம் நோக்கம் ஒன்று தானே? நல்ல தீர்வு விரைவில் கிட்டும். என் கட்டுரை இறுதியிலும் இதனைப் பகிர்ந்திருக்கிறேன். நன்றி அய்யா. சிந்தனைகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, நன்றி! எழுத்துகள்தான் வேறு;வேறு .நம் எண்ணங்கள் ஒன்று தான். இன்னும் இது போன்ற சிந்தனைகளைத் தொகுத்து,எட்ட வேண்டியவர்கள் காதுக்கு எட்டுமாறு செய்ய வேண்டும். நாம் தொட வேண்டிய தூரத்தைத் தொட்டுவிட முயல வேண்டும்...! இணைவோம்..தொடர்வோம்..! நன்றி.!

      நீக்கு
  3. அருமையான அலசல் நண்பரே
    பயிற்சி மட்டுமே போதும் என்ற நிலைதான் இன்று வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! மதிப்பெண்களை நோக்கிய கல்வியால் பொறியாளர்களை,மருத்துவர்களை உருவக்கமுடியுமே ஒழிய ஒருபோதும் நல்ல "மனிதர்களை" உருவாக்க முடியாது. எங்கள் ஊர் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களின் கவிதை நினைவுக்கு வருகிறது. "மதிப்பெண்களை துரத்துகிறது கல்வி; மானவனாகும் பயிற்சியில் ஜெயித்து விடுகிறார்கள். மனிதனாகும் முயற்சில் தோற்று விடுகிறார்கள்"....மனிதம் நோக்கிய கல்வி குறித்த கவலையால் எழுதியது..'வலைப்பூ வித்தகரான ' தங்களின் வாழ்த்துக்கு நன்றி!

      நீக்கு
  4. அருமையான பகிர்வு ஐயா. மற்ற பாடங்களை வாழ்க்கைக்குக் கற்றுக்கொடுக்கிறோம்..ஆனால் தமிழ்ப் பாடத்தில் மட்டும்தான் வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கிறோம்...என்பது முற்றிலும் உண்மை. ஆனால் இன்னும் நாம் மேம்படவேண்டும். மாணாக்கர்களை தமிழில் மேம்படுத்தவேண்டும். இது சார்ந்து மருத்துவர் பொன்முடி வடிவேல் என்பவர் கருத்திட்டுள்ளார்.
    மாணவர்களும் பெற்றோரும் இன்னும் ஆசிரியர்களுங்கூட தேர்ச்சியை பெரிதாகப்பேசுவது அவர்களைப்பொருத்தவரை சரியானதாயிருக்கலாம். ஆனால் நான்கண்டவரையில் தமிழென்றில்லாமல் எல்லாப்பாடங்களிலுமே மாணவர்கள் தேர்ச்சிபெற்றவராக இல்லையென்பதே உண்மை.

    பள்ளியில் முதல்மதிப்பெண்பெற்றமாணவர்களில் பலரையும் அவரமட்டுமன்றி மிகுதியானமதிப்பெண்பெற்றோரையும் கேட்டுப்பார்த்தவரை, பத்தாம்வகுப்புக்குப்பின்னுஞ்சரி, +2விற்குப்பின்னுஞ்சரி, படித்து எழுதியவற்றுக்கான விளக்கங்களை சொல்லக்கூடியவராக ஒருவரையுங்காணமுடியவில்லை!எவரேனும் ஒருவரையாவது பார்த்துவிடலாமென்று நானும் காலங்காலமாக மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன், இல்லை, ஒருவருமில்லை!

    இயற்பியலில் அடிப்படையான பலவினாக்களை நான் கேட்டுப்பார்த்ததுண்டு. சரியானவிடையை அவர்கள் சொல்வதேயில்லை! அதைவிட, 'தேர்வுதான் முடிந்துவிட்டதே, அத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது!' என்போர், பலர்!

    தமிழ்வழிப்பள்ளிகளில் +2முடித்தபின்னும் ஆங்கிலத்தைப்பொருத்தவரை மாணவர்களின் நிலை மிகவும் வருந்தவைப்பதென்பதை சொல்லத்தேவையில்லை. அவர்களுக்கு அடிப்படையில் சொல்லின் வகைகளேகூட என்னவென்பது தெரியாது. வினைச்சொற்களை முக்காலத்துக்கும் பயன்படுத்துவதை அறிந்த ஒருமாணவரைக்கூட இதுவரை நான் கண்டதேயில்லை! இதில் இன்னுமுள்ள மற்ற ஒன்பதுவகையானகாலங்களையும் அறிந்த ஒரு மாணவரை பார்க்கமுடியுமா?

    எந்தவொருமாணவருக்காவது ஆங்கிலத்தில் அனைவருமறிந்த பல் பெயர்ச்சொற்களன்றி ஒரு ஐம்பதுசொற்களையாவது பொருளுடன்சொல்லமுடியுமா?

    தமிழில், பண்புத்தொகையென்றால் என்னவென்றுகேட்டதும் சொல்லிவைத்தாற்போல அனைத்துமாணவர்களும் 'மைவிகுதிவந்தால் அதுதான்...' எனச்சொல்கிறார்களே?

    தொகையென்றால் என்னவென்பதற்கு இன்றுவரை எந்தவொருமாணவரும் விடைசொன்னதேயில்லை!

    மனப்பாடஞ்செய்வதும் மண்டையிலேற்றுவதும் தேர்வுமுடிந்ததும் மறந்துவிடுவதுந்தான் இன்று கல்வியாயிருக்கிறது.

    மனப்பாடஞ்செய்யாதவர்கள் தேர்வில் தோல்வியுறுகிறார்கள் மாணவர்களின் இந்தக்குறைக்கு ஆசிரியர்கள் பொறுப்பாகமாட்டார்கள். ஆனால் மேலே நாம் பார்த்த அவற்றுக்கெல்லாம் ஆசிரியர்களேபொறுப்பு.

    ஆசிரியர்களின் கடமை மாணவர்களை தேர்ச்சியடையச்செய்வதன்று. தேர்ச்சியடைவது மாணவர்களின்பொறுப்பு. பொறுப்பற்றமாணவர்கள் தேர்ச்சிபெறாமற்போகட்டும். நூற்றுக்குனூறுபெற்றும் எதுவுமறியாமல்வருபவர்கள் கற்றதெல்லாம் வீணன்றி வேறென்ன? - அசிரியரல்லாதாரின் பார்வை இது தான். இன்னும் நிறைய ஆய்வோம். நம் நிலை உயர உழைப்போம். மிக்க நன்றி. மொழி நடை இயல்பு. எனக்கும் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள் ஐயா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா..!தங்களின் நீண்ட கட்டுரை எனது பதிவிற்குக் கிடைத்த அங்கீகாரம்! . தற்காலக் கல்வி குறித்து நாம் நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது என்பதை தங்களின் கருத்து தெளிவுபடுத்தியுள்ளது..மொழி நடை இயல்பு குறித்து எழுதியிருந்தீர்கள்..உங்களின் அன்பிற்கு நன்றி...! எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு மிக நேர்த்தியாகச் செய்யும் அந்த இயல்பை எனக்குக் கொஞ்சம் கற்றுக்கொடுங்கள் ...ஐயா!..தொடர்ந்து சிந்திப்போம்! செயல்பட முயல்வோம்..! நன்றி ஐயா!

      நீக்கு
  5. மிக நல்ல பதிவு ஐயா ! மொழிநடை இயல்பாக உள்ளது. மற்ற பாடங்களை வாழ்க்கைக்குக் கற்றுக்கொடுக்கிறோம்..ஆனால் தமிழ்ப் பாடத்தில் மட்டும்தான் வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கிறோம்...என்பது நிதர்சனமான உண்மை. தமிழ் மொழி மேன்மையுற மேலும் பல ஆய்வுகளைச் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற நிலவன் ஐயாவின் ஆவலுக்கு ஏற்ற கட்டுரை ஐயா. மிக நன்றி

    பதிலளிநீக்கு
  6. அண்ணனுக்கு வணக்கம்,
    வெறும் பிரச்சனைகளை மட்டும் பேசிடாமல் தீர்வுகளையும் முன்வைக்கிற பதிவு..
    அனைத்தும் உவப்பான உடன்பாடான தீர்வுகளே...
    கொள்கை முடிவுகள் நோக்கி நகருங்கள்..
    நன்றி ..
    மிக நீண்ட பதிவு இதை நான் இரண்டாண்டுக்கு முன்னர் எதிர்பார்த்தேன். இனி தொடரும் என்றே நினைக்கிறன். வாழ்த்துக்கள் ..தொடர்க
    http://www.malartharu.org/2014/04/captain-america-winters-soldier.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி..இனி தடையின்றித் தொடரும். நான் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும் தங்களின் அன்பிற்கும் நன்றி...!

      நீக்கு
  7. உள்ளதை உள்ளபடி சொன்ன அருமையான பகிர்வு. ...உங்கள் சமூக நலன் குறித்த அக்கறை பாராட்டுக்குரியது. ஆனால்...தமிழ் நாட்டில் தமிழின் நிலை....? மாறும்...மாற்றுவோம்...வாழ்த்துக்கள்....ஒருவழியாக உங்கள் தளம் வந்துவிட்டேன் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கவிஞரே !. வலைப்பூவில் உங்களைப்போன்றவர்கள் எழுத வேண்டும்..தமிழின் நிலை.....? மாறும்!..தொடர்வோம்.நன்றி.!

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...