புதன், 18 ஜூன், 2014

இலக்கியச் சாரல் .

                                     உடைந்த சிலம்பும் உடையாத சிலம்புகளும்..

 தமிழின் முதல் காப்பியம் மட்டுமல்ல;எண்ணற்ற புதுமைகளை, புரட்சிச் சிந்தனைகளை அறிமுகப்படுத்திய காப்பியம் சிலப்பதிகாரம். பெயர் வைப்பதில் தொடங்கி, வாழ்த்து, பெண்முதன்மை, காட்சியமைப்பு,
நாடகப் பாங்கு, பாத்திரப் படைப்பு, அறிமுகம் செய்தல், யாப்பு முதலியவற்றில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திப் புரட்சி செய்கிறார் இளங்கோ.
சிலப்பதிகாரத்தில் கதை ஓட்டத்திற்கு, காப்பிய இனிமைக்கு, திருப்பு முனைகளுக்கு உயிருள்ள பாத்திரங்கள் பெறும் இடத்தை விட உயிரற்ற ஓர்அஃறிணைப் பொருள்-ஓர் அணிகலன் பெறும் இடம் சிறப்பானது.
உலக இலக்கியங்களுள் எந்தப்பாத்திரத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு காப்பியத்தில் சிலம்புக்கு உண்டு. காப்பிநாயகி கண்ணகி மற்றும் பாண்டிமாதேவியின் அணிகலன்களாக அமைந்து,காப்பியம் முழுதும் வந்து கதையை இழுத்துச் செல்கின்றன.வாழ்த்திவழிபடுதல் வரையில் மூன்று காண்டங்களிலும் சிலம்பு தொடர்ந்து விளங்கிக் காப்பியதையே நடத்திச் செல்வது போலுள்ளது. என்ற மு.வரதராசனாரின் கூற்று இங்கு நோக்கத்தக்கது..

சிலம்புகள் காப்பியம் முழுவதும் இடம் பெற்று, கதை நகர்வுக்கு அடிநாதமாக விளங்குவதற்குப் பின்வரும் பகுதிகள் சான்றுகளாகும்.
          ''சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
           சிலப்பதி காரம் என்னும் பெயரால் 
           நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்''  
                               (பதிகம்)
  இளங்கோவடிகளின் கூற்றாக வரும் பதிக அடிகளில் சிலம்பு காரணமாவே காப்பியம் பெயர் பெற்றது தெளிவாகிறது.
                   கோவலன்தன் மனையகம் மறந்து மாதவிபால் விருப்பம் கொண்டு வாழமுற்படுகிறான். கோவலனைப்  பிரிந்து வாழும் கண்ணகி மங்கல அணி தவிர மற்றைய அணிகலன்கள் அணியாதவளாய் காட்டப்படுகிறாள். கண்ணகியின் நிலையைக்  காட்டும் இளங்கோ,, 
        ''அஞ்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய..''
             (அந்திமாலைச் சிற ப்பு செய் காதை)
என கண்ணகி, 'சிலம்பு முதலான அணிகளை அணியவில்லை' எனக் காட்டுகிறார்.
          பின்பு ஊழ்வினை காரணமாக மாதவியோடு ஊடல் கொண்ட கோவலன் கண்ணகியிடம் வருகின்றான்.தன் நிலைக்கு நாணி வருந்தும் கோவலனிடம் கண்ணகி, "நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்புள கொண்ம் "என்கிறாள். 
      கொலைக்களக் காதையில் கண்ணகி கோவலனுக்குத் தன் கையால் அமுது ஆக்கிப் படைக்கிறாள். மனம் நெகிழ்ந்த கோவலன் 
   "சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான்போய் 
    மாறி வருவன் மயங்காது ஒழிக" (கொலைக்களக் காதை)  
என்று கூறி,இணைச் சிலம்புகளுள் ஒரு சிலம்பை மட்டும் எடுத்துச் செல்வது தெரியவருகிறது.
    அந்த ஒற்றைச் சிலம்பு பொற்கொல்லன் வஞ்சனையால் கவரப்படுகிறது.அச்சிலம்பு,'போற்றரும் சிலம்பு','சித்திரச் சிலம்பு',செயவினைச் சிலம்பு',செஞ்சிலம்பு'எனக் குறிக்கப்படுகிறது.
    பின்பு,கோவலன் கொல்லப்பட்ட பிறகு கண்ணகியின் மற்றொரு சிலம்பு வெளிப்பட்டுக் கதையை நடத்துகிறது. மற்றொரு சிலம்பை ஏந்தியவளாய் கண்ணகி,அல்லலுற்று,ஆற்றாது வெஞ்சினம்கொண்டு வேந்தனிடம் வழக்குரைக்கின்றாள். இச் சிலம்பு செம்பொற்சிலம்பு, இணையரிச் சிலம்பு, பொன் தொழில் சிலம்பு என அடைமொழியுடன் போற்றப்படுகிறது. இரண்டு சிலம்புகளுக்கும் அடைமொழிகள் தனித்த நிலையில் திரும்பி வராமல் தரப்பட்டுள்ளமை கவனிக்கத் தக்கது. 

  உடைந்த சிலம்பு உடைக்கும் உண்மைகள்..

             கண்ணகியின் சிலம்புகள், பாண்டி மாதேவியின் சிலம்புகள் ஆக நான்கனுள் சிலப்பதிகாரக் கதைக்கு மூன்று சிலம்புகள் காரணமாக அமைகின்றன. அவையாவன 1.கோவலன் கைப்பட்ட விற்பனைச் சிலம்பு 2.கண்ணகி கைச் சிலம்பு 3.கொபெருந்தேவியின் களவுச் சிலம்பு.
   இந்த மூன்றனுள் எந்தச் சிலம்பு அரசவையில் கண்ணகியினால் உடைக்கப்படுகின்றது என்பது ஆராயத்தக்கது.
                          கண்ணகி சீற்றத்துடன் கைச் சிலம்புடன் காவலன் அவைக்கு விரைகின்றாள். காவலனுடன் வழக்குரைக்கின்றாள். அப்போது சிலம்பே வழக்குப் பொருளாக விளங்குகின்றது. ''என் காற் பொற்சிலம்பு மணியுடை அரியே'' என்கிறாள் கண்ணகி. 
   ''தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி 
    யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே''
            (வழக்குரை காதை )
என்கிறான் பாண்டியன். கண்ணகி தன் கையிலுள்ள சிலம்பை வேந்தன் முன் உடைக்கவில்லை .
 ''தருக எனத்  தந்து தான்முன் வைப்பக்
  கண்ணகி அணிமணிக் கால் சிலம்பு உடைப்ப
  மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே''
                  (வழக்குரை காதை)
வேந்தன், கோவலனிடமிருந்து முன்னர் பொற்கொல்லனால்  கைப்பற்றப்பட்ட சிலம்பினை அவைக்குக் கொண்டுவரச் செய்தான். கண்ணகி உடனே அச்சிலம்பைத்தான் எடுத்து உடைத்தாள் ; கண்ணகி தான் எடுத்துவந்த சிலம்பை  உடைக்கவில்லை.
              கோவலன் கைப்பட்டு, பொற்கொல்லனால் வஞ்சிக்கப்பட்டு, கண்ணகியினால் உடைக்கப்பட்ட சிலம்பிலிருந்து தெறித்த மாணிக்கப்பரல்கள் மன்னவன் வாயருகில் தெறித்தது.
           உடைந்த அச்சிலம்பு பாண்டியன் மற்றும் பாண்டி மாதேவியின் உயிரையும் பறித்தது. மதுரை மாநகர் அழிவுக்குக்  காரணமானது.
       "பூகார்க் காண்டத்தில் சிறு அணிகலனாகவே உள்ள சிலம்பு,மதுரைக் காண்டத்தில் கண்ணகியின் கையிலே விளங்கி'வழக்குப் பொருளாக மாறுகின்றது.அதுவே வஞ்சிக்காண்டத் தில் வழிபாட்டுப் பொருளாகவும் அமைந்து பெருஞ்சிறப்போடு திகழ்கிறது" என்ற மு.வ அவர்களின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.  
         இவ்வாறு உடைந்த சிலம்பு,'கோவலன் கொண்டு வந்த சிலம்பு'என்பது உறுதியாகின்றது.  (படங்களுக்கு நன்றி- கூகுள் மற்றும் முரசொலி பொன்விழா மலர்..) 
   (கட்டுரை நீளமாக இருப்பதால்...தொடர்ச்சியைப் பகுதி இரண்டில் காண்போம்..வாசகர் கருத்தறிந்து..)
     பகுதி இரண்டில்...       
 அதிகாரம் இழந்த இளங்கோவடிகள் அதிகாரம் படைத்தார். அது தான் சிலப்பதிகாரம்.         
அது சரி சிலப்பதிகாரம் என்கிற பெயருக்குக் காரணமான சிலம்பு எது? கண்ணகியின் சிலம்பா? கோப்பெருந்தேவியின் சிலம்பா?
இரண்டாம் பகுதியில் காண்போம் ....
  
  

15 கருத்துகள்:

 1. அண்ணா படங்கள் நீங்கள் வரைந்ததா?

  ஒவ்வொன்றும் அருமை ..

  நல்ல பதிவு அண்ணா

  நீங்கள் தொடர்ந்து எழுதவது மகிழ்வு..
  தொடர்க..
  http://www.malartharu.org/2014/06/jci-training-jci-pudukkottai-central.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓவியர் மாருதியின் அற்புதமான ஓவியங்கள்.(ஒன்று மட்டும் யாருடையது என்று தெரியவில்லை..)
   நன்றி.

   நீக்கு
 2. அட அட... என்ன நடை அ்யயா! சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை போல அல்லாமல் ஏதோ விடைதேடும் புதிர்போல அடுத்தது என்ன என்று முன்னோக்கி ஓடும் முனைப்பைத் தூண்டுவதில் வெற்றி பெற்று வி்ட்டீர் அய்யா. வாழ்த்துகள். ஆய்வுகள் இப்படித்தான் புரியும் நடையில் இருக்க வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள் (சாண்டில்யன், தமிழ்வாணன், சுஜாதா லெவலுக்கு அடுத்த பகுதிக்குக் காத்திருக்க வச்சிட்டீங்க அய்யா.) நன்றி. பி.கு-1.படஙகள், வண்ண வேறுபாட்டில் எழுத்துகளை இறக்கி கவனிக்க வைத்த விதம் அருமை. 2.பதிகத்தின் 3ஆம்வரியில் உள்ள எழுத்துப் பிழையைத் திருத்துங்கள். 3. பாண்டிமா தேவியின் சிலம்பு சிலப்பதிகாரத்தில் காட்சிக்கே வரவிலலையே! கூற்றாக மட்டுமே கொண்டுவந்த இளங்கோவடிகளின் இலக்கியத் திறன்தான் என்னே?! விரைவில் அடுத்த பகுதியை இடவேண்டுகிறேன், இல்லன்னா வீ்ட்டுக்கே வந்திடுவேன்..

  பதிலளிநீக்கு
 3. கட்டுரை முழுக்க சிலம்பொலி. இலக்கியச் சாரல் தொடரட்டும்!
  தமிழ்மணம் ஓட்டுப் பட்டை இணைக்கவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும், வாழ்த்தும் எனக்கு மகிழ்ச்சி ஐயா.!.தமிழ்மணத்தில் இணைக்கத் தெரியவில்லை.விரைவில்,தொழில் நுட்ப தேர்ச்சி பெற்று இணைத்துவிடுகிறேன் ஐயா. நன்றி.!

   நீக்கு
 4. சிலப்பதிகாரம் முழுவதையும் ஆய்வு செய்ததைப் போன்ற அருமையான ஆய்வுக்கட்டுரை அய்யா. அதற்கான விளக்கப் படங்களும் மிகவும் பொருத்தம் ஐயா. தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு.....

  http://pudhukaiseelan.blogspot.in/

  பதிலளிநீக்கு
 5. அய்யா வணக்கம்!
  தங்கள் நடையும் கொண்ட கருத்தைத் திறம்பட உரைக்கும் திறனும் என்னை வெகுவாகக் கவர்கின்றன. தாங்கள் கூறுவது சரியே தான்! ஏனென்றால் , சிலம்பின் வெளித்தோற்றம் ஒன்றாயினும் உள்ளிருக்கும் பரல்கள் மாணிக்கங்களா முத்துக்களா என்பதில் தான் வேறுபாடு இருக்க முடியும்.
  கண்ணகியின் கையிலுள்ள இணையரிச் சிலம்பு குறித்து இங்கு பிரச்சனை எழவில்லை. கோவலனிடமிருந்து அரசன் கைப்பற்றிய சிலம்பின் உள்ளிருப்பவை அரசி அணிந்த முத்துப்பரலுடையதா அல்லது வேறா என்பதுதான்பிரச்சனை.
  அந்தச் சிலம்பை உடைத்தால் தானே சிலம்பு அரசியுடையதா அல்லது கண்ணகியுடையதா என்பதை மெய்ப்பிக்க முடியும்?
  எனவே கண்ணகியுடைத்தது நீங்கள் கூறியுள்ளபடி, கோவலனிடமிருந்து அரசனால் கைப்பற்றப்பட்ட சிலம்பேதான்!
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  நன்றி!

  பதிலளிநீக்கு
 6. முதல் பகுதி நன்று இரண்டாம் பகுதிக்கு காத்திருக்கிறேன்..

  www.malartharu.org

  பதிலளிநீக்கு
 7. பதிவு சிறப்பாக உள்ளது. தொடருங்கள். தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. இரண்டாம் பகுதிக்கு காத்திருக்கிறேன்..நன்றி

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஐயா. தங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். பார்க்கவும். நன்ற்

  பதிலளிநீக்கு
 10. ஒ! அண்ணா எப்போ பகுதி ரெண்டு எழுதுவீங்க? பயங்கர தலைவலி. பின்ன இவ்ளோ தீவிரமான இடத்திலா தொடரும் போடுவீர்கள்? அருமை அண்ணா!

  பதிலளிநீக்கு
 11. உங்களுக்குள் உள்ள திறனாயும் திறம் பார்த்து வியந்தேன் ஐயா. சிலம்பின் வரலாறு குறித்த உங்களின் பார்வை மிக ஆழம். மு.வ.வின் உசாத்துணைமூலம் உங்களின் திறனறியறிவை மெய்ப்பிக்கமுயலும் பாங்கு நேர்த்தி. சிலப்பதிகாரத்தின் சிலம்பு கோவலனால் கைப்பற்றப்பட்ட சிலம்பு என்றே நினைக்கிறேன். ஏனெனில் பாண்டியன் இறப்பு அதைச் சார்ந்ததாகவே அமைந்திருக்குமென்பது என் எண்ணம். நல்ல ஆக்கபூர்வமான ஆழமான பதிவு ஐயா. என் மாணவர்களிடம் கட்டாயம் கொண்டுசெல்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 12. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

  http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_21.html

  நட்புடன்

  வெங்கட்.
  புது தில்லி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...