செவ்வாய், 4 நவம்பர், 2014

இலக்கியப் புதிர்...

காதலுகாக மதம் மாறிய கவிஞன்.....!!!

"காதலுக்கு மதமுமில்லை;ஜாதியில்லையே
  கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே "என்ற கவியரசரின் பாடலை யாராலும் மறக்கமுடியாது. காதலுக்காக மதம் மாறுவது என்பது இன்றைக்குப் பெரிய விடயமல்ல. கி.பி பதினான்காம் நூற்றாண்டில் மதம் மாறுவது என்பதும் பெரிய செய்தியல்ல.கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசர், சைவத்திலிருந்து சமணத்திற்கும் பின் சைவத்திற்கும் மாறியது அனைவர்க்கும் தெரிந்ததே..!
ஆனால்,காதலுக்காக ஒரு கவிஞர் மதம் மாறினார் என்பதுதான் அதிசயம்.!
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள 'நந்திபுரம்' ஊரில், வைணவ வேதியர் குலத்தில் பிறந்தவர்.பெற்றோர் இட்ட பெயர் 'வரதன்'.
திருவரங்கம் கோயிலில் பரிசாரராகப் (கோயில் சமையற்காரர்)பணியாற்றினார்.
இவர் திருவானைக்காவில் உள்ள சிவன்கோயிலில் பணிபுரிந்த ஆடல்நங்கை மோகனாங்கிமேல் காதல் கொண்டு,அவருடனே வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் மார்கழி மாதம், மோகனாங்கி கோயிலில்,மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவைப் பாடல் ஒன்றைப் பாடினாள்.
   "உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் .........
       ............................................................................................................
    எம் கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க!
    எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க!" என்றப பாடலைப் பாடினாள். இந்தப் பாடலைக் கேட்டவுடன்,தோழிகள் கலகலவெனச் சிரித்தனர்.ஏனெனில் பாடுவது சிவனுக்குரிய பாடல்;வாழ்வது வைணவனோடு. தோழிகளின் சிரிப்பிற்கான காரணத்தைப் புரிந்துகொண்ட மோகனாங்கி அதிரடியாக ஒரு முடிவெடுத்தாள்.
  இரவு வந்த காதலனிடம்,"நீ என் மீது வைத்துள்ள அன்பு உண்மையானால்,சைவனாக மாறவேண்டும்"என்று உறுதியுடன் கூறினாள்.
  வரதனும் காதலியின் அன்புக் கட்டளையை ஏற்று,சிவதீட்சைப் பெற்று வந்தான். திருவரங்க வேலையை விட்டுவிட்டு,சம்புகேசுவரர் சிவாலயத்தில் பணியில் சேர்ந்தான்.
   இப்படிக் காதலுக்காக மதம் மாறிய வரதன் பெரும் கவிஞன் ஆனான்.(உடனே நீங்கள்,வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறியது,'மதமாற்றம்'ஆகுமா? என நினைப்பீர்கள்.!.சைவத்திற்கும் வைணவத்திற்கும் நடந்த போராட்டம் மிகப் பயங்கரமானது..கொல்லப்பட்டவர்கள் எத்தனையோ பேர்.!?
சைவ,வைணவப் போர்பற்றித் தெரிந்துகொள்ள,கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படிக்கவேண்டும்.அதில் 'ஆழ்வார்க்கடியான்'என்ற வைணவன்,ஒரு கோயிலின் கீழ் நின்றுகொண்டிருப்பார்.கோயில்கூரையின் மேற்பகுதியை,ஒரு காகம் கொத்திக்கொண்டிருக்கும். அதிலிருந்து ஒருகல் ஆழ்வார்க்கடியான் தலையில் விழும்."ஆ"என்று கத்திக்கொண்டே மேலே பார்ப்பார். "ஓ..!சிவன்கோயிலை இடிக்கிறாயா..?!..நன்றாக இடி.."என்று வலி தாங்கமுடியாத அந்த நேரத்திலும்,சந்தோஷப்படுவார்..அந்த அளவுக்கு மதத் துவேஷம் இருந்த நாள் அது.!.இன்னும் உங்களுக்குச் சந்தேகம் என்றால், கமல் நடித்த தசாவதாரம் படம் பாருங்கள்.??!!
சரி,அந்தக்கவிஞரின் பெயர் என்ன..?.இலக்கிய உலகத்தில் எந்தப் பெயரால் அவர் அழைக்கப்படுகிறார்?.சொல்லுங்கள் பார்க்கலாம்.!
(இலக்கிய ஜாம்பவான்கள் முத்துநிலவன் அய்யா,விஜு,கோபிநாத்,'பெருநாழி'குரு அய்யா இவர்களைத்தவிர மற்றவர்கள் சொல்லுங்கள்.)
    (குறிப்பு: இவர் சிலேடைக கவிஞர்..!!.. வசை பாடுவதில்(கலாய்க்கறதுல...) இவருக்கு நிகர் இவரே!!.. இவர் எழுதிய பாடல் ஒன்று...
 "கார்என்று பேர்படைத்தாய்; ககனத்து உறும்போது 
 நீரென்று பேர்படைத்தாய்; நெடுந்தரையில் வந்ததன்பின் 
 வார்ஒன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததன்பின் 
 மோர்என்று பேர்படைத்தாய்; முப்பேரும் பெற்றாயே!"...
      நீ ஆகாயத்தில் இருக்கும்போது மேகம் என்று பேர்.. பூமிக்கு வந்ததும் நீர் என்று பேர்.. இடைச்சியர் கையில் வந்தபின் மோரென்று பேர்.... 


என்ன கிண்டல் பாருங்க... இன்று பாக்கெட் பால்ல என்னென்ன கலக்குறாங்க... இவர் மட்டும் இருந்தாரு எல்லாரையும் கலாய்ச்சுப்புடுவாரு.
. நீங்க கண்டுபிடிச்சிடீங்க...... சொல்லுங்க....!!....???
{ படங்களுக்கு நன்றி.. google!!. }

46 கருத்துகள்:

  1. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!

      நீக்கு
  2. ஆஹா நல்லாருக்கே,இவர எனக்குத் தெரியுமே
    ”வில்லா லடிக்கச் செருப்பா லுதைக்க வெகுடொருவன் கல்லா லெறியப் பிரம்பா லடிக்கவிக் காசினியில் அல்லார் பொழிற்றில்லை அம்பல வாணற்கொ ரன்னைபிதா இல்லாத தாழ்வில்ல வோவிங்ங னேயெளி தானதுவே”என தில்லை நடராஜர் மீது இகழ்வது போல் புகழ்ந்து படியவரே உங்களது புதிருக்கானவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி!.புதிருக்கான விடையைப் புதிராகவே தந்தமைக்கு நன்றி..! அவரேதான்,
      "இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
      அம்மென்றால் ஆயிரம்பாட் டாகோதோ?- சும்மா
      இருந்தால் இருந்தேன்; எழுந்தேனே ஆயின்,
      பெருங்காள மேகம் பிளாய்.!"
      இந்தப் பாடலில் அவரே தன் பெயரை புதிர்மூலம் சொல்லியுள்ளார்.!

      நீக்கு
  3. பதில்கள்
    1. அய்யா நன்றி!
      சகோதரி கீதா அவர்களும்,இளமதி அவர்களும்தான் சொல்லிவிட்டார்களே..!
      அந்தக் காதல் மன்னன் கவிகாளமேகம்..!

      நீக்கு
  4. வணக்கம் ஐயா!

    வரதராயிருந்து தேவியின் அருளைப் பெற்றமையால்
    காளமேகப் புலவரானார்.
    கலைமகள் துதியான ”வெள்ளைக் கலையுடுத்து”
    இவராற் பாடப்பட்டது.

    அவரின் சிலேடைப் பாடல்கள் பிரசித்தமானவை.

    ’வால் எங்கே’ எனத் திருமலைராயன் அவையிலிருந்த
    சில புலவர்கள் ”கவிராயர்கள்” என தம்மை பெருமைப் படுத்திச் செருக்குற்றிருந்தமை கண்டு அவர்களை ஏளனமாகச் சுட்டிப் பாடிய

    வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
    காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே - சாலப்
    புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
    கவிராயர் என்றிருந்தக் கால்!

    இக்கவி போன்றும் இது போலவும் இன்னும்
    என் தந்தை அவரின் சிலேடைப் பாடல்களைக் கூறிப்
    பொருளும் தந்து நகைப்பதுண்டு.

    பலவற்றை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள்.
    அருமை ஐயா! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. சமீபத்தில்தான் நண்பர் சுரேஷ் ஜி அவர்கள் கா'ம' மேகப் புலவரைப் பற்றி எழுதி இருந்ததால் ,உங்கள் புதிருக்கு உடனே 'என்னாலும்' விடைக் கண்டு பிடிக்க முடிந்தது !

    பதிலளிநீக்கு
  6. சகோதரியின் வருகைக்கு நன்றி..!
    தங்களின் நினைவாற்றல்,தமிழ்ப்பற்று கண்டு வியக்கிறேன்.!
    தங்கள் தந்தையாரின் தமிழ்ப் புலமைக்கு என் வணக்கங்கள்.!
    தங்களின் தாயார் குறித்த குறட்பாக்கள் படித்து நெகிழ்ந்தேன்.!
    நான் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றேன்.இருந்தாலும் கவிதை எழுதுவதெல்லாம் கிடையாது...வராது..!
    தங்களின் கவித்திறன் மென்மேலும் வளர,கலைமகளை வேண்டுகிறேன்..!

    பதிலளிநீக்கு
  7. யுவர் ஆனர்... இந்த மகா.சுந்தர் அய்யா மகா.வம்பராகிவிட்டார் அவர்மீது யாரும் அறம்பாடிவிடாமல் காக்க இஸட் பிரிவுப் பாதுகாப்புத் தரவேண்டுமாய்ப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
    தமிழ்நாட்டில் முதன்முதலாகக் கட்சிமாறுவதில் புகழ்பெற்றவர் திருநாவுக்கரசர்தான் என்று பல மேடைகளில் பேசியிருந்தேன். ஆனால் இவர் அவர்க்கும் முன்பே ஒருவர் இருந்திருக்கிறார் என்று இலக்கிய மேற்கோளுடன் கலக்கிய பதிவைப் பார்க்க வேண்டுகிறேன். மதம் மாறியவர் இவர்தான் என்னும் செய்தி சத்தியமாய் இப்போது இவர்சொல்லித்தான் தெரிந்துகொண்டேன்.அவரது ஒரு பாடலைச் சொன்னதும் பெயர் தெரிந்துவிட்டது. ஆனால் என்னைச் சொல்லக் கூடாது என்று “தடா“ போடுகிறார்! “தெரியும் ஆனா தெரியாது“ என்று விடை சொல்ல என்னை அனுமதிக்கக் கோருகிறேன் யுவர்ஆனர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.!! ஹா! ஹா..!..!
      அய்யா..! நான் ஏன் உங்களுக்கும், விஜூ அய்யா போன்ற ஜாம்பவான்களுக்குத் தடை விரித்தேன் தெரியுமா?...புதிருக்குப் புதிர் போட்டு,என்னைச் சிக்கவச்சுட்டாருய்யா விஜூ அய்யா..!
      அப்புரம் தப்பிச்சு வந்ததே பெரும்பாடப்போச்சு..?!
      (விஜூ அய்யாவின் பின்னூட்டம் பார்க்க.)

      நீக்கு
  8. நீங்க ஓவியர்ங்கறதால நீங்களே வரைஞ்சு போடுறீங்களாய்யா? தேர்வு செய்த படங்கள் திருடத் தூண்டுகின்றனவே! (நன்றி-ராஜாஜியின் பொன்னியின் செல்வன் முன்னுரை) அருமை அருமை! கலக்குங்கய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா.! எதையும் நேர்த்தியாகச் செய்யவேண்டும் என்பதை என்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்ட புதுகையில் ஒருவர் இருக்கிறார்..! அவர் யார்..?
      ஒரு க்ளு ..அவர் பகலில் சூரியன்.!இரவில் சந்திரன்..!

      நீக்கு
    2. யாரிடத்துக் கேட்டாலும் யாரென்று சொல்லுவரே
      யாரென்று கேட்டீர் அவரிடத்தே! - யாரறிவார்
      தாரீனும் வாழை தளிர்த்திடவே தாங்கியதில்
      நீருற்றிக் காக்கும் நிழல்!
      நன்றி அய்யா!!

      நீக்கு
    3. முத்துமணிப் பந்தல் முழுநிலவு தாலாட்டச்
      சத்தமிடும் மின்னல் சரிந்துவிழ - யுத்தமெழும்
      வானோடு வான்முட்ட வள்ளல் முகிலினங்கள்
      தானோடிச் சிந்தும் துளி

      நீக்கு
    4. "யாவருமே உள்ளுணர்ந்து யாரென் றறிந்திடுவார்!
      பாவலரும் போற்றிடும் பைந்தமிழ்ப் பண்பினில்
      பூவளரும் சோலை புகுவண் டினைப்போலே
      நாவலரும் செய்திடுவார் நன்கு! "

      நீக்கு
    5. நன்றி அய்யா..! எனக்கும் வெண்பா வருகிறதா?..நன்றி அய்யா.!

      நீக்கு
    6. நன்குரைக்கும் நந்தமிழ் நாவலரே நீர்கொண்ட
      அன்புரைக்கும் கல்லோ அவர்?

      நீக்கு
    7. கல்லோ நிலவோ கதிரோ எனவெண்பாச்
      சொல்லால் பொருளழகால் சொக்கவைத்தீர்! சொந்த
      ஒளியில்லா அந்நிலவும் ஊருறஙகும் நேரம்
      வெளிச்சத்தை நல்குவது வீண்..

      நீக்கு
    8. இனிய சுந்தர், விஜூ!
      நானும் புதிர்(கள்) போடலாம்தானே?
      “அடிபிடி“ என்று அவளை இவர் சொல்ல,
      அடாபுடா என்று இவரை அவள்சொல்ல,
      கவியடி விழுந்த கனித்தமிழ்ச்ச்ண்டைகள்-
      அன்றொன்றும், இன்றொன்றும் சொல்ல வேண்டும். (எப்புடீ?)

      நீக்கு
    9. இருகண்ணிற் கண்டதெலாம் இக்காதிற் பட்டு
      விரும்பாது போனதெலாம் வந்தே –“ ஒருகால்
      அடியென் றவன்சொல்ல ஆரையடா சொன்னாய்“
      பிடிபதிலை என்னுமனப் பித்து!

      எருமைக்கும் கீரைக்கும் ஏட்டிக்குப் போட்டி
      அருமை கவிகதையுள் ஆழ்ந்து – பெருமைசொலி
      நின்றவக் காலம் நினைவில் நிழலாடும்
      என்றுறுமோ வப்பே றினி?
      பதில் சரியோ அய்யா?

      நீக்கு
    10. ஒருகதை நன்றாய் உரைத்தீர் புதிதாய்,
      மறுகதை உண்(டு),ஏன் மறந்தீர்? - சிறுகுறிப்பு
      காரனைய மூடரைக் கல்வியால் மாற்றிய
      பாரதி தாசன் படைப்பு.

      நீக்கு
    11. பழங்கதை சொன்னீர் பதிலும் சரிதான்,
      புதுக்கதைமற் றொன்றும் புகல்வீர் - இதுஉங்கள்
      கண்ணில் படாமல் கரந்ததோ? பாவேந்தன்
      எண்ணில் எழுத்தில் எடு.

      நீக்கு
    12. குடும்ப விளக்கேற்றிக் கொள்ளுமறி வற்ற
      இருண்டவீ டொன்றில் இருந்து - தடுமாறி
      இப்படி யானேன் இதனை அறியாதேன்
      எப்படி ஆனால்தான் என்?
      விடை சரியோ அய்யா?
      விளக்க வேண்டும்!!!!

      நீக்கு
  9. தாமதத்திற்கு மன்னிக்கவும். தங்களை மாதிரி நண்பர்களிடமிருந்து தான், நான் தமிழின் சுவையை சுவைத்துக்கொண்டிருக்கிறேன்.
    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே.!நான் கற்றுக்கொண்டிருக்கும் ஒரு மாணவன்.!
      தொடர்ந்து சிந்திப்போம்..! சிந்திப்போம்..!

      நீக்கு
  10. சொக்கன் அய்யாவைப் போன்றே நானும் தாமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் அய்யா!
    அருமையான விளக்கமளித்தீர்கள்.
    புதிரை விடுவிக்கும் வாய்ப்பு சிரமமானதுதான்.
    புதிரைப்போடுதல் எளிதானது.
    வந்ததற்கு நானும் ஒரு புதிரைப் போட்டுவிட்டுப்போகிறேன்,
    “ தாசிக்காக ஒரு பெரும்புலவர் சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறியிருக்கிறார்
    அவர் யார்?
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம்! புதிருக்குப் பதிலாக மற்றொரு புதிரைப் போட்டுவிட்டு என்னைச் சிக்கவைதுவிட்டீர்களே..!
      "தாசிக்காக ஒரு பெரும்புலவர் சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறியிருக்கிறார்". அவர் 'திருமங்கை ஆழ்வார்' தானே...சரியா என்பதைத் தாங்கள்தான் சொல்லவேண்டும். இதொ ஒரு வெண்பா.

      "புதிர்க்குப் புதிர்போட்ட நற்கதிரே! உன்றன்
      எதிரேயார் நிற்கக் கூடும்?_மதிநிறையுன்
      தங்கத் தமிழுக் கிணையேது? ஈடேது?
      அங்கம் சிலிர்த்தேன் மகிழ்ந்து!

      நீக்கு
    2. கேள்வி கேட்பது எளிதானது என்பதற்காகக் கேட்டேனே ஒழியத்
      தங்களின் ஞானத்தை அறிவேன் அய்யா!
      தேடித்தொகுத்ததும் தேடலும் தானே அறிவு.
      தங்களின் பட்டிமன்றப்பேச்சை நான் கேட்டதில்லை.
      பேச்சு எனக்கு வராதது. குறிப்பாய் மேடைப்பேச்சு.
      தங்களின் உரையைக் காணக் காணொளி இணைப்பிருந்தால் தர வேண்டுகிறேன்.
      வெண்பாவின் ரகசியம் ஒன்றை உங்களுக்கு முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.
      நான்கு சீர்கள் ஒரு அடிக்கு வருகிறதில்லையா?
      அதில் ஒன்றாவது சீரிலும் மூன்றாவது சீரிலும் மோனை அமையுமாறு பார்த்துக் கொண்டால் ஓசை சிறக்கும்.

      “புதிரோ உரைவாளும் புத்திக்கு முன்பு
      மதியோ முகம்நாணி மங்கும்! - கதிரென்றால்
      காலுதைத்(து) உன்றன் கவிகேட்க ஓடிவர
      மெலுதற ஞால மெழும்!

      உங்கள் வெண்பா அருமை அய்யா!
      வருத்தம் வேண்டாம் விருத்தம் எளிது!!
      நன்றி

      நீக்கு
  11. அருமை நண்பரே,,, நான் முகநூல் வழியாக எதார்த்தமாக பார்த்து வந்தேன் வாழ்த்துக்கள்.

    தங்களை மதுரையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி..! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!
      மதுரையில் தங்களைச் சந்தித்து மிரண்டு போனேன்..!
      பேசிப்பழகிய பின் தெரிந்தது தங்களின் அன்புள்ளம்..!
      தொடர்ந்து சிந்திப்போம்..!

      நீக்கு
  12. வணக்கம்
    ஐயா.

    இலக்கிய சுவை ததும்ப சொல்லியுள்ளீர்கள். அறியாதசில நுணுக்கங்களை அறியக்கிடைத்துள்ளது..பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி அய்யா ..!
      தங்களின் தமிழுணர்வுக்கு என் வணக்கங்கள்.!

      நீக்கு
  13. ஆஹா அருமையான விடயங்களை தொகுத்து தந்துள்ளீர்கள். அனைத்தும் புதிதே அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ! எனக்கு இவை எல்லாம் அதிகம் தெரியாது இருந்தாலும் காளமேகப் புலவர் என்று கேள்விப் பட்டிருகிறேன். எனவே இருக்குமோ என்று நினைத்தேன். சரியாகி விட்டது. பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி..!.தங்களின் கவியுள்ளத்திற்கு என் வணக்கங்கள்..!

      நீக்கு
  14. வாருங்கள்..இலக்கியத் தேரை வடம் பிடிப்போம்..!
    வரலாற்றில் நாமும் நாளை தடம் பதிப்போம்..!!

    பதிலளிநீக்கு
  15. முதல்முறை வருகிறேன் தங்கள் பக்கம் நகைச்சுவைக்கு சொந்தக்காரர் போன்றே தங்கள் உருவ பிரதிபலிப்பு மனத்திரையின்

    சிந்தனையில் தேரோட்டும் சிந்தியவெண் பூவே
    புதியதொரு மின்னல் புகுந்ததென் கூட்டில்
    இனியதொரு பாதை இனம்புரியா தேடல்
    அருகிவரும் தேரின்சா ரதி ...

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்.

    நற்புலவர் கூட்டத்தில் நான்புகுந்து விட்டேனா
    சொற்திறன் இன்றிச் சுவைத்திட்டேன்! – நற்றமிழைக்
    கற்றோர் நவின்ற கருத்தெல்லாம் என்மனத்தில்
    பற்றாய்ப் பிணைந்த பயன்!

    பதிலளிநீக்கு
  17. புதிர்போட்டு ஆறுநாள் ஆகிப் போச்சு!
    ..... புலிபசித்துப் புல்தின்ன லாகி யாச்சு!
    மதிகசக்கி யோசிக்க மயங்கப் பேசும்
    ..... மகாசுந்தர் வலைப்பூவில் மதுவைக் காணோம்!
    சதிசெய்த காலத்தில் சிறகு தூங்கச்
    .....செந்தமிழெண் ணப்பறவை சிதைத லாமோ?
    விதிசெய்யப் புறப்படுவீர்! வழிமேல் வைத்த
    .....விழிபலவும் காத்திருக்கும் வருகை தாரீர்!!

    அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அய்யா!!!

    பதிலளிநீக்கு
  18. நண்பரே மதுரை விழா பதிவு காண வருக....

    http://www.killergee.blogspot.ae/2014/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  19. அடடா அடடா அடாஅடா சும்மா
    மடமட என்று மரபுக் கவிதை
    குவியும் கருத்து குதூகலம் நல்கக்
    கவிப்போர் அமைந்தது காண்.

    பதிலளிநீக்கு

  20. வணக்கம்!

    வண்ணத் தமிழாறு வந்தோடும் இவ்வலையில்
    எண்ணம் இனிக்கக் குளித்திட்டேன்! - திண்ணமுடன்
    சொல்லி மகிழ்வேன்! சுடர்தமிழ் பாராளும்!
    துள்ளி மகிழ்வேன் தொடா்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  21. அண்ணா!!
    நெசமாவே நான் கண்டுபுடுசுட்டேன். ஆனா லேட்டா வந்ததால பலரும் முந்திக்கிட்டாங்க. அடுத்த முறை உடனே வரேன். பக்கமே புதுசு அண்ணா புதுசு ன்னு சொல்லுற அளவு செம கலக்கலா இருக்கு அண்ணா!!

    பதிலளிநீக்கு
  22. நந்திபுரம் தற்பாேதய ஊர் பெயர் என்ன?

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...