வியாழன், 31 டிசம்பர், 2015

வடம் பிடிப்போம்! வள்ளுவத் தேரை!



              வடம்பிடிப்போம்!வள்ளுவத் தேரை!



                  ஓர்நாட்டு மாந்தருக்காய்ப் பாட வில்லை!
                           உலகத்தின் உயர்வுக்காய் எண்ணிச் செய்தான்!
                  கார்பொழியும் மேகமென காற்றைப் போல
                           காலமது உள்ளமட்டும் மனிதம் வாழ!
                   வேரெனவே ஊன்றிவிட்டான் புனிதம் காக்க!
                           வெகுண்டெழுந்தான் புவியிலுள்ள கயமை மாய்க்க! 
                   ஊர்க்கூடித் தேரிழுப்போம் வாரீர்! வாரீர்!
                             உலககெங்கும் பொதுமறையின் புகழைக் காக்க!


                    கூரான வாள்போல அறிவி ருந்தும்
                            குணமில்லா மாந்தரினை மரமே யென்றான்!
                    போரெனவே உழன்றுநிற்கும் பூமி தன்னில்
                           போற்றாரைப் போற்றிடுங்கள் பொன்போல் என்றான்!
                    சீரான வாழ்க்கைக்குப் பொருள்சேர் என்றான்!
                            சிக்கனமாய் வாழுவதே சிறப்பு என்றான்!
                    தீர்வுசொன்ன வள்ளுவனைப் போற்றி வாழ்வோம்!
                         திசையெட்டும் அவன்பெருமை கொண்டு சேர்ப்போம்!

                     சோர்வாக இருப்போர்க்கு ஊக்கம் ஊட்டி!
                             சோம்பலெனும் தீமையினைத் தீயில் வாட்டி!
                     தூர்ந்துவரும் மானிடத்தின் தூய்மை நாட்டி!
                              தூயதொரு அன்பினிலே புனிதம் கூட்டி!
                     வேராக நமைத்தாங்கும் வேதம் தன்னை
                              விழுதாகத் தாங்கிடுவோம் பேதம் இன்றி!
                    ஆர்வமுடன் ஆர்த்தெழுவோம் ஒன்றாய்க் கூடி!
                              அகிலமதில் குறளமுதின் கொள்கை பாடி!


                      நேராக நாம்வாழ நெறியும் தந்த
                               நிகரில்லா வள்ளுவத்தைப் பரப்பு தற்கு
                      நாராக நாமிணைந்து மணக்கும் பூவால்
                               நல்மாலை சூட்டிடுவோம் இனிக்கும் பாவால்!
                      போர்ப்பரணி பாடிடுவோம் முரசு கொட்டி!
                              பொய்யாமொ ழிப்புலவன்  புரட்சி நாட்டி!
                      பாரெழுந்தே வள்ளுவத்தைப் பரப்பச் செய்வோம்!
                               பாட்டனவன் சொன்னபடி பண்பால் வெல்வோம்!

5 கருத்துகள்:

  1. வள்ளுவப்பாமாலை அருமை! அருமை! அதிலும் பாரெழுந்தே வள்ளுவத்தைப் பரப்பச் செய்வோம்!
    பாட்டனவன் சொன்னபடி பண்பால் வெல்வோம்!
    அட்டகாசம். மத்தபடி இதை பிரித்து ஆராயும் ஆளவுக்கு என் சின்ன மூளை வேலை செய்யாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  2. நன்றி! புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. சரி சரி மரபுக்கவிதை நல்லாவே வருது! ஒத்துக்கிறோம்
    நடைமுறையில் வள்ளுவத்தைச் செயற்படுத்தத் தடையாக இருப்பவை எவை என்று யோசித்து, அதுபற்றி நம் இளைஞர்க்குச் சில ஆலோசனை தாருங்களேன்.வள்ளுவரை வானளாவப் புகழ்வதை வள்ளுவரே விரும்ப மாட்டார். (சொல்லுதல் யார்க்கும் அரிய..) எனவே வள்ளுவப் பயனை வையகம் பெற என்ன செய்யலாம் என்பது பற்றி எழுதுங்கள். உரைநடையும் உங்களுக்கு நன்றாகத் தானே வருகிறது? கவிதைக் குதிரை பயணத்திற்கும், நடராஜா பஸ்சர்வீஸ் சகலத்திற்கும்..நடை..உரைநடை!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...