திங்கள், 19 செப்டம்பர், 2016

வழக்குரை காதை(பகுதி .5 ).தீர்ப்பு -உயிர் தந்து நீதி காத்தவன்

வழக்குரை காதை.( பகுதி .5) உயிர் தந்து நீதி காத்தவன் 

தீர்ப்பு ..யானோ அரசன்..?

                  மாணிக்கப் பரல்கள் தன் வாயருகில் தெறித்தவுடன் உண்மையை உணர்ந்தான் பாண்டிய நெடுஞ்செழியன். தவறிழைத்த தமக்கு, இந்நாட்டை ஆளும் தகுதி இல்லையென்பதை மனதளவில் உணர்ந்தான்.

                 யாம்..யாம் ..என அரசர்களுக்கே உரிய மரியாதைப் பன்மையுடன் பேசியவன், "யானோ அரசன்? யானே கள்வன்".. என யான்..என் என தன்னிலையினும் தாழ்ந்தான். ( மன்னர்களும், கவிஞர்களும், மடாதிபதிகளும் தங்களை (ROYAL WE) மரியாதைப் பன்மையில் யாம்..எனச் சொல்லுதல் மரபு. மகாகவி பாரதி, "யாமறிந்த மொழிகளிலே...என்ற கவிதையில் யாம் எனச் சுட்டியிருப்பது காண்க.)

  விரிவான தீர்ப்பு...

 1. பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட..

    கோவலன் குற்றமுடையவனா என்பதை அமைச்சர்களைக்  கலந்து ஆலோசிக்காமல், பொற்கொல்லன் சொல்லை அப்படியே ஏற்றுக்கொண்டது முதல் குற்றம்.

2.யானோ அரசன்; யானே கள்வன்..

    தவறிழைத்த நான் அரசனல்லன். 'யானே கள்வன்' என்றதனால்,    'கோவலன் கள்வனல்லன்' நானே குற்றவாளி.

  உயிர் தந்து உயர்ந்தவன் 

    ' தென்னாட்டு நீதி  என்னால் பிழையானதே' என வருந்தி, 'கெடுக என் ஆயுள்' எனத் தன்னுயிர் தந்து, நீதியைக் காத்து, வரலாற்றில் இடம்பிடித்தான் பாண்டியநெடுஞ்செழியன்.

    இதனை கவிக்கோ அப்துல் ரகுமான்,

            "நீதிபதி யாயிருந்தே 

              நீதியைக் கொன்றவன்நான்

             செத்துவிட்ட நீதியைஎன் 

              சீவன்தந்து உயிர்ப்பித்தேன் 

              ..............................................................

            இறந்ததால் பிறந்தவன்நான்"  எனக் கவிதையில் காட்டுகிறார். 

நீதிமன்றத் தீர்ப்புகள் அன்றும் இன்றும்

          "சிலம்பை உடைத்து 

            என்ன பயன்?

             அரியணையிலும் 

             அந்தப் பொற்கொல்லன்!"   ஈரோடு தமிழன்பனின் கவிதை இன்றைய தீர்ப்புகளை  விமர்சிக்கிறது.

                  இன்று நீதிமன்றங்களில் தீர்ப்புகள் எழுதப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. DELAYED JUSTICE IS DENIED JUSTICE. அதாவது தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். காவேரி வழக்கில் ஐம்பதாண்டுகள் கடந்தும் இன்னும் நீதி வழங்கப்படவில்லை. சில வழக்குகளின் தீர்ப்புகள் ஆயிரம் பக்கங்களைத் தாண்டுகின்றன.சில குற்ற வழக்குகளில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனையை,  இயற்கை மரணம் முந்திவிடுகிறது.

                ஆனால், கோவலன் கொல்லப்பட்டது  ஆராயாமல், அவசரமாக  வழங்கப்பட்ட தீர்ப்பு. (HURRIED JUSTICE IS BURRIED JUSTICE) அதாவது,அவசரமாக வழங்கப்பட்ட தீர்ப்பு புதைக்கப்பட்ட நீதிக்குச் சமம்.

            மேல்முறையீட்டு வழக்கில் பாண்டிய நெடுஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு இலக்கிய வரலாற்றில் வேறெங்கும் காணமுடியாத, தமிழர்களின்அறம் சார்ந்த வாழ்க்கைக்குச் சான்று கூறும் தீர்ப்பாகும்.

      யானோ அரசன் ..இது வழக்கு.

      யானே கள்வன் ..இது தீர்ப்பு.

      கெடுக என் ஆயுள்   ..இது தண்டனை.

   தீர்ப்பு ஒத்திவைக்கப்படவில்லை; ஆயிரம் பக்கங்கள் இல்லை. உடனே தனக்குத்தானே தண்டனையை அளித்துக்கொண்டவன் பாண்டிய நெடுஞ்செழியன். அதனால் இறந்தும் வரலாற்றில் இன்னும் உயிர் வாழ்கிறான்.

சிபியை, மனுநீதிச் சோழனை வென்ற பாண்டியன்

        கண்ணகி புகழ்ந்த சிபி, மனுநீதிச் சோழன் ஆகியோரை நீதிவழங்கும் முறையில் வென்றான் பாண்டியன். சிபி மன்னன் புறாவுக்காகத் தன தசையைக் கொடுத்தான். மனுநீதிச் சோழனோ தாய்ப்பசுவின் துயர்போக்கத் தன் மைந்தனைக் கொன்றான். நெடுஞ்செழியன் தன்னுயிரையே தந்து, நீதிக்கு உயிர் தந்தான்.

  கோப்பெருந்தேவியின் தியாகம் 

                கணவன் இறந்தது கண்டு நிலைகுலைந்த  கோப்பெருந்தேவி, "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" என தானும் இறந்தாள்.  கணவனை இழந்த மகளிர்க்குப் புகலிடமாகக் காட்டுவது ஒன்றும் இல்லை என்று தன் சோகத்தை மட்டுமா நினைத்திருப்பாள் அந்த மாதரசி?! தன் துயரோடு, கணவனை இழந்து தவிக்கும் கண்ணகியின் துயரையும் நினைந்து, கணவனையிழந்த கண்ணகிக்கு வேறெப்படி நீதி வழங்க முடியும்? என உயிர் துறந்ததாகக் காட்டும் இளங்கோவின் சொல்லாற்றலை எப்படிப் பாராட்டுவது?!.   நீதிக்க்காகவே உயிர்நீத்த கோப்பெருந்தேவியும் வரலாற்றில் இடம்பிடிக்கிறாள். 

விடைதேடும் வினாக்கள் 

      கண்ணகி மதுரையை எரித்தது சரியா ?  தன் சொந்தத் துயருக்காக ஊரையே எரிப்பது தவறான முன்னுதாரணம் தானே? பொற்கொல்லன் தண்டிக்கப்பட்டானா? பாண்டிய நெடுஞ்செழியன் இறந்த பின்னர், அவன் மகன் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலியிட்டு முறையற்ற செயலைச் செய்ததது பெரும் பிழையல்லவா? இது இன்றைய சாதிவெறித் தாக்குதல்களுக்குத் தவறான முன்னுதாரணமல்லவா..?..இப்படி எண்ணற்ற வினாக்களுக்கு  நாம் சிலம்பிலும் வெளியிலும் விடைகள் தேடவேண்டியிருக்கின்றன.

   சிலப்பதிகாரம் புதுப்புதுப் பொருள்களைத் தன்னுள் புதைத்துவைத்து, என்றும் உயிர்ப்புடன் விளங்குகிறது. காலந்தோறும் 'புதிர்களையும், எதிர்வினைகளையும்' தோற்றுவித்து காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

        என்னோடு தொடர்ந்துவந்து, தவறுகளைச் சுட்டிக்காட்டியும், தட்டிக்கொடுத்தும் ஊக்கப்படுத்திய தோழமைகளுக்கு நன்றி.

துணை நூல்கள்   
1.சிலப்பதிகாரம்-முனைவர் சா.வெ.சு உரை
 2.சிலப்பதிகாரத் திறனாய்வு- மா.பொ.சி 
3.சிலப்பதிகார ஆய்வுக்கோவை ( சிலம்பில் வழக்கும் தீர்ப்பும்- முனைவர்           முத்துவேலு)
4.முத்தமிழ்க் களஞ்சியம் ஆய்வுக்கட்டுரைகள் 
5.பெரியபுராணம் 
6.பழமொழி நானூறு 
7.இறந்ததால் பிறந்தவன் -அப்துல் ரஹ்மான் கவிதைத்தொகுப்பு 
8.ஈரோடு தமிழன்பன் கவிதைகள்    

        

    

3 கருத்துகள்:

  1. அருமை அருமை அய்யா நல்ல வாத திறமை

    பதிலளிநீக்கு
  2. அருமை..சிலம்பினும் தெரித்த வார்த்தைப்பரல்கள்...
    சிக்கலொன்றும் இல்லாத கேட்ட கதையை பிரித்து...உரித்து,அலங்காரம் செய்திருக்கின்றீர்கள்..
    சிலம்பே அழகு,உங்கள் சிங்காரம் இன்னும் அழகு....
    என்னையும் உம் போல் பழகு பழகு என புலம்ப வைத்துவிட்டீர்கள்..
    இன்னும் பறக்கட்டும் எண்ணப்பறவை..

    பதிலளிநீக்கு
  3. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கவிதை பொருத்தமானது
    வாழ்த்துகள் நண்பரே அறிய விடயம் அரியத் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...