வெள்ளி, 30 டிசம்பர், 2016

கவிராசன் பாரதிக்கு ஒரு கவியஞ்சலி

கவிராசன் பாரதிக்கு ஒரு கவியஞ்சலி

        புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் நடத்திய கவி

யரங்கில் என் கவிதை இதோ.

                ரௌத்திரம் பழகு!!!!!
நகரத்தார் அரங்கினில்
அகரத்தை நம் அன்னை மொழி அதனைச்

சிகரத்தில் ஏற்றி வைத்த செந்தமிழன் பாரதிக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

கவிராசன் கழகமதில்
கவியரங்கம்  கேட்க
செவியோடு வந்திருக்கும்
செந்தமிழ்ப் பாவலர்காள்
அனைவருக்கும் என் வணக்கம்!!


துருப்பிடித்த உவமைகளால் மங்கிப்போன
   தூர்ந்துவிட்ட கற்பனையால் துவண்டு போன
இருளடைந்த இலக்கியத்தைச் சாணை தீட்டி
   இருந்தமிழைச் சீர்செய்தான் இனிமை கூட்டி
நெருப்பினிலே சொல்லேடுத்தான் தமிழும் ஆள!
   நேர்மை எனும் வில்லேடுத்தான் பகைமை மாள
அரும்பல்ல அவன்கவிதை வலிமை கூட்டி
   ஆதிக்கத்தின் அடிவேரில் பாயும் ஈட்டி !

   

  என் தலைப்பு ரௌத்திரம் பழகு!!

பள்ளியில் சேர்ந்து பாடம் பழகினோம்
சின்ன வயதினில் சைக்கிள் பழகினோம்
வாலிப வயதினில் வண்டி பழகினோம் 
பாத்திறம் கற்று பாடல் பழகுவோர் உண்டு
நாத்திறம் உடையோர் சிலர் நல்லிசைப் பழகுவார்
வேத சாத்திரம் பழகுவோரும் உண்டு
சாதி கோத்திரம் அறிந்து விலகுவோரும் உண்டு
ஆனால் எங்கள் ஆண்மைக் கவிஞன்
ஆத்திரம் பழகென்று அன்றே சொன்னான்..

அச்சம் தவிர் என்றும் ஆண்மை தவறேல் என்றும்
ஆத்திசூடி சொன்னவன் உச்சமாய்ச் சொன்னான்
ரௌத்திரம் பழகு என்று!!
                 பழகினோமா நாம்???
அநீதி கண்டு ஆர்பரித்தோமா நாம்?
அடங்கினோம்
மூலையில் முடங்கினோம்!

ஈழத்தில் இடி விழுந்து நம்
இனமேல்லாம் வீழ்ந்த போது
மானாட மயிலாட பார்த்து
மகிழ்ச்சியில் திளைத்தோமே நாம்
தலைநகரம் கொலை நகராய் மாறி
நிர்ப்பயாக்கள் நிலைகுலைந்த போதெல்லாம்
கண்ணீர் விட்டோம். கலைந்தே சென்றோம் 

கண்ணெதிரே கொடுமைகளைக் கண்டபின்னும்
கைகட்டி நின்றோமே.!
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
பக்கத்தில் செல்லாதே பாப்பா
ஓடி ஒதுங்கி விடு பாப்பா வெறும்
ஊமையென இருந்துவிடு பாப்பா..
என்றல்லவா மாற்றினோம்??
இனியாவது ரௌத்திரம் பழகுவோம்!

ஓடி உழைக்க மனம் இன்றி- என்றும்
  ஊர் பணத்திலேயே உண்டு-பணம்
தேடித் திமிரோடு அலைந்து-தன்
   தேவைக்கதிகமாய்ச் சேர்த்து-புகழ்
பாடிப் பொய்மையில் உழன்று-அற்பப்
   புழுவினைப் போலவே வாழும்-பல
வேடிக்கை மனிதரைக் கண்டு-நானும்
   வெம்பித் துடித்தது உண்டு.

சூழ்ந்துவரும் சூழ்ச்சிதனைக் கண்ட பின்னும்
    சொரணையின்றி இருப்பதுவோ வெட்கம் துட்கம்
வீழ்ந்திருக்கும் நீதியினை விசையோ டெழுப்ப
    வீறுகொண்டு போர்த்தொடுப்போம் வெற்றி யுண்டு.
தாழ்ந்தயினம் தலைநிமிர்ந்து எழுச்சி கொள்ள 
    தனல்கொண்டு எரித்திடுவோம் கொடுமை தன்னை
ஆழ்ந்திருக்கும் ரௌத்திரத்தை அனலாய்ச் சேர்த்து
    ஆர்ப்பரித்து எழுந்திடுவோம் அநீதி மாய்த்து.

ஓடுகின்றார் பணம்தேடி ஓய்வில் லாமல்
    ஒடுங்குகின்றார் ஊனமாகி நத்தை போலே
தேடுகின்றார் செல்வமதை நியாய மின்றி
    திருடுகின்றார் பிறர்பொருளை இரக்க மின்றி
வாடுகின்றார் துயரதனைப் பார்த்த பின்பும்
    வருந்தவில்லை திருந்தவில்லை வெட்கக் கேடு.
சாடுகின்றார் எவருமில்லை சதியைக் கண்டும்
    சகிக்கின்றார் கொடுமைதன்னை மான மின்றி.

ஆறுகுளங்கள் நீர்நிலைகள் எங்கே போச்சு?
    அத்தனையும் அடுக்குமாடி வீடாய் ஆச்சு.
சேறுபோல சாதியாலே அழுக்காய் ஆச்சு.
   சீரழிக்கும் மதுவினாலே சிறுமை யாச்சு.
நாறுகின்ற அரசியலைத் தூய்மை யாக்க
    நல்லவர்கள் கையதனில் அதனைச் சேர்க்க
வீறுகொண்டு எழுந்திடுவோம் ஒன்றாய்ச் சேர்ந்து
   வெற்றியதை  எட்டும்வரை நன்றாய் ஆய்ந்து  

வெடிக்கட்டும் புதுப்புரட்சி விரைவில் எங்கும்
   விதையெனவே பரவட்டும் திசைகள் எட்டும்
அடித்தவுடன் மேலெழும்பும் பந்தைப் போல
   ஆர்ப்பரித்து எழுந்திடட்டும் உணர்ச்சி வேகம்
துடித்தெழுவோம் கயமைகளை வேரில் சாய்க்க
   தூங்காமல் பணிபுரிவோம் புகழைக் காக்க.
முடிக்கின்றேன் கவிதையினைக் கரங்கள் தட்ட
   முண்டாசுப் புலவனுக்கே ஓசை எட்ட!.
  
 

9 கருத்துகள்:

 1. அருமை
  பாரதியை உயர்த்தி
  பார் இதில் பாடியது
  அருமை அருமை

  பதிலளிநீக்கு
 2. அழ(ள)கான மரபும் இடைமிடைந்த புதுக்கவிதையும் அழகு. அது ஏன் விருத்தங்களைக் கூட புதுக்கவிதை போல வரி மடக்கில் முறையின்றிப் போட்டிருக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 3. ஆஹா அருமை. துட்கம் புது வார்த்தையா ? துக்கம் எனும் வார்த்தைதானா?

  பதிலளிநீக்கு
 4. சொரணையற்ற தமிழர்க்குச் சொரணை ஏற்றும் வகையில் சாட்டை அடியாக விழுந்துள்ளது ஒவ்வொரு சொல்லும்.

  பதிலளிநீக்கு
 5. ரௌத்திரம் பழகு.....

  நல்லதொரு கவிதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...