செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தேவதைகளின் காதலன் (பகுதி 2)

உணர்வுகளில் ஒளியேற்றுவது மட்டுமல்ல; உண்மைமைகளை நுட்பமாக உரைப்பதும் கவிதையின் அவசியமாகிறது.தேவதைகளும் சாத்தான்களும் நிறைந்தது உலகு. தேவதைகளின் உருவில் சாத்தான்கள் உலவுவது இயல்பே. இங்கு பொய்கள், உண்மைகளின் உருவத்தோடு உலா வரும். புகழுரைகளைத்  தன்னருகில் நெருங்கவிடாது, நிறுத்துப் பார்க்கும் மனம் அவசியம். புன்சிரிப்புகளில் கூட போலிகள் உண்டா? இதோ கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதை பாருங்கள்.

        வந்தார்கள்/ அமர்ந்தார்கள்/ தேநீர் அருந்தினார்கள் 

        இல்லாததையெல்லாம்/ சேர்த்தும்/ கோர்த்தும்/

         அவனை ஏராளம் புகழ்ந்து/ புல்லரிக்க வைத்தார்கள் 

         ஒவ்வொரு புகழ்ச்சியிலும்/ அவன் சிரிப்பை/

          நிறுத்துப் பார்த்தார்கள்.

         எடை குறைந்திருந்தால்/ புதுப்புது உத்திகளைக்/

         கையாண்டு/ புகழுரைகளில்/ புதுமை படைத்தார்கள் 

        அவர்கள் புகழ்ச்சியின்/ நீள அகல ஆழம் அளந்து 

        அவனும் அவர்களுக்குச்/ செய்யவேண்டியன செய்து 

         மகிழ்வித்தான்.

        ..............................................................................................

         அவனைக் கடந்தவுடன்/ அவர்கள்/

          ஒருவரை ஒருவர் பார்த்து 

          அவர்களுக்குள்/ சிரித்துக்கொண்டார்கள். 

         அவர்களை நினைத்து/ அவனும் சிரித்துக் கொண்டான்.

'தோற்றப்பிழை' என்ற மற்றொரு கவிதையில்,

          'உன் பார்வையில்/ தெறிக்கின்றன/ விஷத்துளிகள் 

           உன் புன்னகையில்/ நெளிந்தொடுகின்றன/ பாம்புகள் 

           ....................................................................................................

          கடவுளெனத் திரியும்/ உன்னில்/ எனக்கு மட்டும் 

          தெரிகின்றன/ சாத்தானின் சாயல்கள். 

கவிஞர் சந்தித்த 'அந்த மனிதர்கள்' வாழ்க!. அவர்களால்தானே நமக்கு இப்படியோர் கவிதை கிடைத்தது!. கவியரசர் கண்ணதாசனின் நண்பர்களைப் பாருங்கள்!..

                         " சோற்றுக் கலைகின்ற

                           நாயைப் பிடித்ததைச் 

                          சொர்க்கத்தில் வைத்தாலும் அது 

                           நாற்றமலந் தின்னப் 

                          போகுமென்னுங் கதை 

                            நாமறிவோம் நெஞ்சே ! 

                            கூனற் கழுதைக்குச்

                             சேணங்கள் இட்டதைக் 

                            கோவிலில்  வைத்தாலும் அது 

                             கானம் படிப்பதை 

                             விட்டுவிடாதென்று 

                             நாமறிவோம் நெஞ்சே!

                            சாக்கடைப் பன்றிக்குப் 

                            பூக்கடை வாசத்தின்

                            சாத்திரம்சொன்னாலும் அதன் 

                            போக்கிடம் என்பது  சாக்கடைதானென்று 

                             நாமறிவோம் நெஞ்சே !

                            நான்கண்ட நண்பர்கள் 

                            மூன்று வகையல்ல 

                             நாலாம் வகையடியோ !அவர் 

                            வாங்கிக் கொள் வார்ஒரு 

                             நன்றி சொல்லார் !அது            

                             வாழும் முறையடியோ !நன்னெஞ்சே 

                             வாழும் முறையடியோ ! 

கவிஞர்களின் அனுபவங்கள் கவிதைக்கு உயிர் தருகின்றன. அனுபவங்களும் புதிய உத்திகளும் கவிதைகளை உயர்த்துகின்றன. கவிஞர் மேத்தா," செருப்புடன் ஒரு பேட்டி" கவிதையில், நீங்கள் தீவிரமாக எதைப்  பற்றியாவது சிந்திப்பதுண்டா? என்ற கேள்விக்கு செருப்பு பதில்   சொல்வதாக எழுதியிருப்பார் .

           சில தேசங்களையும்/  சில ஆட்சிகளையும் 

           பார்க்கும்போது/  மீண்டும் நாங்களே 

           சிம்மாசனம் /ஏறிவிடலாமா 

            என்று யோசிப்பதுண்டு !

மேத்தா அவர்களின் 'வாழைமரம்' கவிதையும் புதிய பாடுபொ ருள்களால் புதிய உணர்வுகளை நமக்குத் தந்தவை. கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதையில் கோப்பைகள் சிரிப்பதைப் பாருங்கள்..!

சிரிக்கும் கோப்பைகள்

            குறைந்த ஒளியின்கிழ் / ச்சியர்ஸ் /

           சொல்லிக் கொள்கின்றன / கோப்பைகள் .

            திரவத்துளி பட்டதும் / மெல்ல நழுவி /   

            வெளியேறுகின்றன / பொய்கள்.

            பழைய காதலிகளின் / பட்டியல் அடுக்கினார் / ஒருவர் .

             செல்போனில் பேசிய மனைவியிடம் /

              முக்கியமான கூட்த்திலிருப்பதாய்க் / கூறினார் ஒருவர்

              கவிழ்ந்த கோப்பையை / நிமிர்த்தி /

              அதன்மேல் சத்தியம் செய்து  /

              இனி குடிக்கவே மாட்டேன் / என்றார் ஒருவர் .

             நிதானமாக / சியர்ஸ் சொல்லிக்கொண்டு / 

              சிரித்துக்கொள்கின்றன / கோப்பைகள் .

'தேவதைகளால் தேடப்படுபவன்' நூலில் காதல் கவிதைகள் குறைவே என்றும், 'எல்லாமே காதல் கவிதைகள்தான்' என்றும் இந்நூல் வெளியீட்டு விழாவில்  நிறைய பேசப்பட்டன. பிரச்சனைகள் நிறைய இருக்கிறபோது காதல் கவிதைகள் தேவைதானா? என்ற வினாக்கள் எழும். கவிக்கோ அவர்களின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.    

                              காதலை ஏன் பாடுகிறாய் ?

                               பிரச்சனைகளைப் பாடு 

                               என்கிறார்கள்.

                              காதலைவிடப் 

                              பெரிய பிரச்சனை எது ?

காதலைவிட பிரச்சனை வேறில்லை என்பதைவிட, இங்கு எது காதல் என்பதே பெரும் பிரச்சனை..! நம் பாட்டன் வள்ளுவன் சொன்னானே "மலரினும் மெல்லிது காமம்"என்று. அதை மறந்ததால்தான் இவ்வளவுப் பிரச்சனைகளும். காதல் என்பது அகவெளியில் வாழ்வது.  வானம் நம்மருகில் மிதக்க வேண்டுமா?. நினைவு வெளிச்சத்தில் நீராட வேண்டுமா?  நம் அனுபவம், அறிவு இவற்றையெல்லாம் கழட்டிவைத்துவிட்டு காதல் உணர்வில் ஜிவ்வென்று பறப்போம் வாருங்கள்.!

                நிலவின் ஒளி / குறித்திருந்த / அவ்விரவில்

                 உன் / நினைவுகளில் / வெளிச்சத்தில் / 

                 நீராடிக்கொண்டிருதேன்

                நீயோ /   சின்னச் சின்ன / கப்பல்கள் செய்து 

                அதில் / ஓவ்வொரு / நட்சத்திரமாய் /

                அனுப்பிக்கொண்டிருந்தாய் 

                ஒரு நேரத்தில் / நட்சத்திரங்கள் / தீர்துவிடவே ......

                அடுத்து வந்து / கப்பலில் / நிலாவையே / 

                அனுப்பி வைத்தாய் .

                அடுத்தென்ன அனுப்பப் போகிறாய் / என்ற ஆவலில் 

                 நானிருகையில் / நீயே / வந்து சேர்ந்தாய் .

                 அப்போது/ வானம் நமக்கருகே 

                மிதந்து  கொண்டிருந்தது .

உணர்வுகளின் மென்மையைக்காட்ட, கவிஞரின் காதல் உள்ளத்தை அறிய இந்த ஒரு கவிதை போதும்..!

           இன்னும் கவிஞரின் 'திருவிழாக்களும் குழந்தைகளும்', திறப்புவிழா' கவிதைகளும் வெவேறு அனுபவங்களை நமக்குத்தருவன.. 

         இத்தொகுப்பில் 'பி.யு.சின்னப்பா' கவிதை மட்டும் சற்று மாறுபட்டு, நிற்கிறது. தன்னளவில் அது மிகச் சிறந்த கவிதை என்றாலும், அது மற்ற கவிதைகளோடு ஒன்றாமல் தனியாகத் தெரிகிறது.

  முதல் நூலிலிருந்த ஈர உணர்வு ஒன்பதாம் நூலிலும் இருப்பது சிறப்பு. அதோடு  கவிஞரின் அனுபவமும் கைகோர்த்துக்கொண்டு அவரின் கவியாளுமையைக்  கூர்மைப்படுத்தியிருக்கின்றன.

   கவிதையும் இசையும் தேவதைகளின் மொழிகள். கவிதை தேவதையை வசப்படுத்தியிருக்கிறார். கவிதை தேவதையின் காதலனாக இருக்கின்ற கவிஞர் தங்கம் மூர்த்தி, இன்னும் பலநூல்களை இயற்றட்டும். அது அன்னைத் தமிழுக்கு மேலும் இனிமை சேர்க்கட்டும்!!.

     (தேவதைகளால் தேடப்படுபவன்   

      படி வெளியீடு, கே.கே.நகர் மேற்கு,

     (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்) சென்னை 600 078

      விலை  ரூ 60. 

      கவிஞரின் செல்பேசி எண் 94431 26025)

                              

                         

                              

 

7 கருத்துகள்:

  1. காதல் உணர்வு ஜிவ்வென்று பறக்க வைத்தது...!

    பதிலளிநீக்கு
  2. கவிதை தேவதையின் காதலனை அருமையாக அடையாளப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. அறிமுகம், வாசிக்கும் ஆர்வத்தை மேம்படுத்திவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நூலினைப் படித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் எழுகிறது நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. உங்களுடன் இன்னொரு முறை இந்நூல் பற்றி மேடை மொழி இல்லது பேச வேண்டும்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...