புதன், 22 அக்டோபர், 2014

               வள்ளுவத்தாய்....

  (வலை உலக நண்பர்களுக்கு வணக்கம்!.. நீ...ண்ட இடைவெளிக்குப் பின் நம் இலக்கியச் சந்திப்பு தொடர்கிறது.. 2009இல் நான் எழுதி, காஞ்சிபுரம் மாவட்டம், உலகத் திருக்குறள் பேரவை வெளியிட்ட திருக்குறள்- வாழ்வியல் ஓவியம் என்ற  நூலில் வெளிவந்த கட்டுரையைச் சில மாற்றங்களுடன் வெளியிடுகிறேன்..)
   
                 தீப ஒளித் திருநாளில் வழிகாட்டும் ஒளி விளக்காய்த் திகழும் வள்ளுவம் பற்றிச் சிந்திப்போம்.. வள்ளுவனை, "தெய்வ

வள்ளுவன் வான்மறை தந்ததும்" என பாரதி பாடியதைப் போலத் 'தெய்வம்' என்பதா? நல்லன சொல்லியும் அல்லனவிலக்கியும் வழி காட்டுவதால் 'ஆசிரியர்' என்பதா?...உணர்வுகளின்,உறவுகளின் உச்சமாக இருக்கிற 'தாய்' என்பதா? 
தெய்வ நம்பிக்கை எல்லோருக்கும் இருப்பதில்லை.வாழ்வின் முற்பகுதியில் ஆசிரியர்களின் தேவை அவசியம் என்றாலும்,பிற்பகுதியில் (40வயதிற்குப் பின்) ஆசிரியர் நேரடியாக வாழ்க்கையைப் பாதிப்பதில்லை.
வாழ்கை முழுவதும் நம் உணர்வுகளோடு ஒன்றி இருக்கிற தாயாய் வள்ளுவனைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்...

                   தாயுமானவர் 

     "முந்தித்தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்தே
      அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
      சரியச் சுமந்து பெற்ற தாயார்"
என்று பட்டினத்தார் தாயின் பெருமையைப் பாடுகிறார்.. பத்து மாதம் நம்மை வயிற்றில் சுமக்கிறாள். நாம் வளரும் வரை நம்மைத் தோளில் சுமக்கிறாள். உயிருள்ளவரை நம்மைத் தன் நெஞ்சில் சுமக்கிறாள். அதனால் தான்,
       "தெய்வமது தாய்க்குக் கீழதான் - என்றன்
       தாயவளும் சாமிக்கு மேலதான்"என்றார் ஒரு திரைப்படக் கவிஞர்.
நான்மணிக்கடிகையும் "ஈன்றாளோடு  எண்ணக் கடவுளும் இல்" என்கிறது..
                   
              தெய்வம் 
              கருவறைக்குள்!
              அந்தக் கருவறையே 
              இந்தத் தெய்வத்திற்குள்"
என்றார் கவிஞர் நெல்லை ஜெயந்தா.
            தெய்வத்தைத் தாயுமானவன்; தாயினும் சாலப் பரிந்து அன்பு காட்டுபவன் என்றெல்லாம் படைப்பாளிகள் பாராட்டுகிறார்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பர் தசரதனைக் காட்டும்போது,"அன்பு காட்டுவதில் தாய்க்கு நிகரானவன்"(தாயொக்கும் அன்பில்) என்றார். தாய்ப்பால் போல தமிழ்ப்பால் ஊட்டும் வள்ளுவரை என்னவென்பது..?       வள்ளுவரை "மும்முலைத்தாய்"என்கிறார் கவிக்கோ அப்துல்ரகுமான்.
          "திருக்குறளே தாய்தான்
          திகட்டாத சுவைகொண்ட 
          முப்பாலை ஆயுள்
          முழுதும் ஊட்டும் தாய் "

வள்ளுவத்தில் தாய் 

   தாயுமான வள்ளுவர், தன் படைப்பில் நான்கு இடங்களில் தாய் பற்றிச்  சுட்டுகின்றார்.ஈன்ற தாய்,வளர்ப்புத் தாய், செவிலித்தாய் எனப் பலவகைத் தாயார் உண்டு. சிறப்புக்  கருதி ஈன்றாளை வள்ளுவர் நான்கு இடங்களில் எடுத்துரைக்கின்றார்.

  1.பெரிதுவக்கும் தாய்

 ஒரு பெண் தாய்மை அடையும்போது நிறைவை அடைகிறாள். மகவை ஈனுகின்ற பொழுது மரணத்தின் உச்சிக்கே சென்று திரும்புகின்றாள். தாங்கமுடியாத வேதனையை அனுபவிக்கும் போதிலும்,மகிழ்ச்சி அடைகின்றாள். ஈன்ற பொழுது உவக்கின்ற தாய்,எப்பொழுது பெரிதுவப்பாள்? எப்பொழுது மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்வாள்..?என்ற வினாக்களுக்கு வள்ளுவர் விடை காண்கிறார்.
      "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் 
       சான்றோன் எனக்கேட்ட தாய்" (69)
என்கிறார் வள்ளுவர். தன்  மகன் சான்றோன் எனக் 'கண்ட தாய்' எனக் குறிக்காமல் 'கேட்ட தாய்' என்கிறார். இதற்குப் பரிமேலழகர்,"பெண்மை தானாக அறியும் அறிவின்மையால் (....?.)கேட்ட தாய் எனவும் கூறினார்" என விளக்கம் தருகிறார். சமுதாய மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தம் உரையில்,"இங்கு புகழ் என்பது கேட்பதற்க்குரியதே தவிர காண்பதற்குரியதன்று. அதனாலதான் கேட்ட தாய் என வள்ளுவர் சுட்டுகிறார் "என்கிறார்.
எந்தத் தாயும் தன்  குழந்தையை மற்றவர்கள் போற்றிப் புகழும்போது ஆனந்தத்தின் எல்லைக்கே செல்கிறாள்.
     "உச்சி தனை முகந்தால் -கருவம்
            ஓங்கி வளருதடி!
     மெச்சி யுனையூரார் -புகழ்ந்தால் 
            மேனி சிலிர்க்குதடி!
என்று பாரதியும் ஊரார் மெச்சிப் புகழும்போது மேனி சிலிர்ப்பதாகக் கூறுகிறார். இதனை வழிமொழிந்து கவிஞர் வாலியும் 
      "பத்துத்திங்கள் சுமந்தாலே-அவள்
           பெருமைப்பட வேண்டும்.
       உன்னைப் பெற்றதனாலே மற்றவராலே 
           போற்றப்பட வேண்டும் 
       கற்றவர் நிறைந்த சபையினிலே 
           உனக்குத் தனியிடமும் தர வேண்டும்."
என்று தாய் பெருமைப் படும்படி மற்றவராலே போற்றப்பட வாழவேண்டும் என்கிறார்.

2.ஈன்றாளின் பசி 

    அறத்துப் பாலில் 'மக்கட்பேறு' அதிகாரத்திற்குப் பின், பொருட்பாலில் 'ஈன்ற தாய்' வள்ளுவரால் காட்டப்படுகிறார். பொருளில் சொல்வன்மையை அடுத்து,'வினைத்தூய்மை' வருகிறது. சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் வள்ளுவரின் நுட்பம்தான் என்ன...!
      "ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க 
       சான்றோர் பழிக்கும் வினை" (656)
வினைத்தூய்மையின் அவசியம் விளக்க, ஈன்ற தாய் இங்குக்  காட்டப்படுகிறார். "வயது முதிர்ந்த தாய் தந்தையரும்,கற்புடைய மனைவியும், குழந்தையும் பசியால் வருந்தும்போது தீயவை செய்தாயினும் காப்பற்றுக"என்று அறப்பாலின் பொதுவிதி கூறுவதாகப் பரிமேலழகர் கூறுகிறார். பசியால் துடிக்கும் தாயின் வேதனையைத் தீர்ப்பதற்காகக்கூடத்  தீவினைகளைச் செய்யாதே..!என்ற குறளில் வள்ளுவரின் குரல் சற்று அழுத்தமாகவே ஒலிப்பதைக் காணலாம்.
     குன்றக்குடி அடிகளார் இக்குறட்பாவிற்கு விளக்கம் கூறும்பொழுது "துன்பத்தின் எல்லை பெற்ற தாயின் பசி"என்று குறிப்பிடுகிறார்.
      துன்பத்தின் உச்சிக்கே சென்றாலும் நீ பழி பாவங்களைச் செய்யாதே எனக் கூறுமிடத்து,ஈன்ற தாயை உவமையாக்கியிருக்கும் 'வள்ளுவத் தாயின்'உள்ளம் வியப்பைத் தருகிறது.

3.பெற்ற தாயும் மன்னிக்கமாட்டாள்

     பொருட்பாலில் 'வரவில் மகளிர்'அதிகாரத்திற்குப் பின் 'கள்ளுண்ணாமை'வருகிறது .கள்ளுண்ணும் கயமையைக் கடிந்துரைக்க ஈன்றாளைக் காட்டுகிறார் வள்ளுவர்.
    "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
     சான்றோர் முகத்துக் களி"(923)
"பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணை அது"என்று தாயின் கருணையுள்ளத்தைப் படம் பிடிக்கிறார் கவிஞர் கண்ணதாசன். திருடிய,சூதாடுகிற மகனைக்கூடத் தாய் மன்னிப்பாள்.ஆனால் குடித்துவிட்டு வீதியில் வீழ்ந்து கிடக்கும் மகனைக் கண்டால் 'இவன் என் மகனே இல்லை'என்பாள். கருணையுள்ளம் கொண்ட தாயே மன்னிக்கமாட்டாள் என்றால்,சிறு குற்றத்தையும் பொறுக்காத சான்றோர் எப்படி மன்னிப்பார்கள்?..என்ற வினா எழுப்பி கள் உண்ணாமையை வலியுறுத்துகிறார்.

4.புறக்கணிக்கும் தாய் 

பொருட்பாலில் 'உழவு'அதிகாரத்திற்குப் பின் 'நல்குரவு(வறுமை)' வருகிறது. வள்ளுவன் காலத்திலேயே உழவுக்குப் பின் வறுமை தானா...?! பட்டுக்கோட்டைப்  பாடினானே,"காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு,கையும் காலும் தானே மிச்சம்..!" அது அந்தக்காலத்திலிருந்து உண்மைதானோ..!
    "ஏர்புடிக்கும் சாதிக்கு இதுவேதான் தலையெழுத்தா?
       விதிமுடிஞ்ச ஆளுக்கே விவசாயம் எழுதியிருக்கா..?" என்று வைரமுத்துவும் அதை வழிமொழிகிறார்.(..சரி இந்த ஆராய்ச்சியைப் பின்பு பார்ப்போம்.)
"கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்"என்ற வரிகளை  பலரும் பயன்படுத்துகின்றனர். (இது யார் எழுதிய வரிகள்...?..யாமறியேன் பராபரமே..!) வறுமையோடு இருக்கிற தன்  மகனை/மகளை எந்தத் தாயும் வெறுக்கமாட்டாள். மாறாக அதிக பாசத்தைக் காட்டுவதுதான் தாயின் இயல்பு! அனால் வள்ளுவன் 'அறத்திற்கு மாறாக நடந்து,ஒருவனுக்கு வறுமை ஏற்படுமானால்,ஈன்ற தாய்கூட அவனை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள்; தாயே புறக்கணிப்பாள் என்றால் மற்றவர்கள் மதிப்பார்களா?"என்று அறத்தை வலியுறுத்த ஈன்றாளைக் காட்டும் இடம்   சிறப்பானது.
    "அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும் 
     பிறன்போல நோக்கப் படும்." (1047)

உச்சம் 

    மகிழ்வின் உச்சம்,துயரத்தின் உச்சம்,புறக்கணிப்பின் உச்சம் ஆகிய நிலைகளில்,உறவின் உச்சமாகிய தாயை முன் நிறுத்தியுள்ள  வள்ளுவரின் தாயன்பு போற்றத்தக்கது. மகிழ்வின் உச்சம் பிள்ளைகளின் உயர்வைப் பிறர் கூறக் கேட்டலாகும். துயரத்தின் உச்சம் பிள்ளைகளின் ஒழுக்கக் கேட்டினைக் காணலும்,கேட்டலுமாகும். புறக்கணிப்பின் உச்சம் தாயாலே அவமதிக்கப்படுவதாகும்.
        தாயின் மகிழ்வே ஒவ்வொரு உயிரின் உன்னதநிலை என்பதைச் சுட்டிச் செல்லும் வள்ளுவ வாக்கினை ஒவ்வொரு பிள்ளையும் ஏற்று நடக்கட்டும்!.   

14 கருத்துகள்:

 1. நீண்ட இடைவெளிக்குப் பின் வலைப்பதிவு உள்ளங்களை புதுப்பிக்க வந்த சகோதரருக்கு நன்றி! வள்ளுவன் கண்ட தாயை பழைய புதிய இலக்கிய வரிகளோடு விளக்கம் நன்றாக இருந்தது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா,தங்களின் வாழ்த்துக்கு நன்றி! தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

   நீக்கு
 2. தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலையுலக அரசரான தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! நன்றி..!

   நீக்கு
 3. ஆஹா சிறப்பான கட்டுரை...தாயைப்பற்றி விரிவான கட்டுரை..

  பதிலளிநீக்கு
 4. அய்யா,
  வணக்கம். தங்கள் கட்டுரையைப் பலமுறை படித்தேன். குறளை அதன் முறைவைப்பை, உரைகளைப் பாரதியைப் பட்டுக்கோட்டையை ஊடுருவிச் சென்று எடுத்த தலைப்பில் இதற்குமேல் எவரும் சொல்ல எதுவும் இல்லை என்று மலைக்க வைக்கிற ஆய்வை நடத்தியிருக்கிறீர்கள்.
  தரவுகள் சாதாரணமானவைதான். யாவருக்கும் காணக்கிடைக்கின்றவைதான். ஆனாலும காணும் எல்லார்க்கும் இக்கூர்நோக்கு அமைந்திடுவதில்லை.
  வள்ளுவனைப் பற்றிப் பரிமேலழகன் கூறிய ஒரு கருத்தை குறளாய்வு நிகழும் போதெல்லாம் நான் நினைவு கூர்வதுண்டு.
  “எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு “
  அது போலத்தான் நீங்களும் வள்ளுவத்தாயை விளக்கத் தாங்கள் கண்ட நூல் பலவுள்ளும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்பட அளித்திருக்கிறீர்கள்.
  ““உழவு'அதிகாரத்திற்குப் பின் 'நல்குரவு(வறுமை)' வருகிறது. வள்ளுவன் காலத்திலேயே உழவுக்குப் பின் வறுமை தானா...?““
  என்பன போன்ற தங்கள் அங்கதக் கேள்விகள் படிப்போர்க்குச் சிந்தனையுடனான குறுநகையைத் தோற்றுவிக்கப் போதுமானவை.
  கட்டுரையின் ஊடே இது போல இழையோடும் உங்கள் நடைப்பாங்கைத் தனித்து அவதானிக்கிறேன்.
  அளவெடுக்கப்பட்டுச் சரியாகத் தைக்கப்பட்ட உடையில் தங்களின் கைவண்ணத்தில் மிளிர்கிறாள் வள்ளுவத்தாய்.
  படைப்பாளனைத் தாயென்றும் படைப்பை மகவென்றும் கொள்வோமானால்,
  தங்கள் அறிவுத்திறத்திற்கு உரைகல்லாகும் இந்தப் பதிவும் சான்றோன் எனப்பட்டு அதைப் பெற்றமைக்காய்காக நிச்சயமாய்த் தாங்கள் பெரிதுவக்கலாம்.
  ஆம்,
  “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
  சான்றோன் எனகேட்ட தாய்“
  அது நீங்களும் தான்.
  கை நீண்டு இது போன்ற பின்னூட்டங்களை இடுதலைத் தவிர்க்கவேண்டும் என்று நினைத்தாலும் இது போன்ற பதிவுகளைக் காணும் போது அது மறந்துதான் போய் விடுகிறது.
  நீண்ட இடைவெளி இனியேலும் குறையட்டும்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. அய்யா.! முதலில் தங்களுக்கு நன்றி. அச்சுப்பிழை, கவனமின்றிச் செய்த பிழை,அறியாப் பிழை அனைத்தையும் சுட்டிக்காட்டிச் செப்பம் செய்ததற்காக.
  தங்களின் பின்னூட்டம் கண்டு வியந்தேன்..! தங்களின் தனித்த நடை,நுண்மான் நுழை புலத்தோடு தங்கள் வைக்கும் கருத்துகள் இவையெல்லாம் வலையுலகத்திற்குப் பெரும் வரங்கள்.!.
  நாகரிகம் கருதியும்,அன்பினாலும் தங்களின் பாராட்டு மிகையென்றாலும் , அதை எனக்கான உந்து சக்தியாக எடுத்துக்கொள்கிறேன். கணினித் தொழில்நுட்ப அறிவில் இன்னும் மாணவனாகவே இருக்கிறேன்..! அதனாலேயே இடைவெளிகள்...!
  இனி குறையும். நன்றி!

  பதிலளிநீக்கு
 6. உங்கள் ஆய்வும் அதனைச் சொல்லிருக்கும் பாங்கும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா ,உங்களின் வருகைக்கு நன்றி..!.உங்களின் வலைத் தளம் சென்று பார்த்தேன்.அப்பப்பா..... எத்தனைக் கவிதைகளைத் தொகுத்து வைத்துள்ளீ ர்கள்..வலையில் தொடர்ந்து எழுதுங்கள்...!

   நீக்கு
 7. அண்ணா முழுவதும் படித்தேன்...
  தேன்..
  அடர்த்தி மிகுதி...
  இன்னும் ஜனரஞ்சகமாக கொஞ்சம் வாட்டர் கலந்து தந்தால் நன்று..

  அப்புறம் ஒரு விசயம் பளீர் என மின்னிட்டது...
  ஏன் ஒரு குரலுக்கு ஒரு கதை என்று மாணவர்களை கற்பனையில் எழுத தூண்டக் கூடாது..

  இந்த எண்ணத்தை தந்த தங்களுக்கு நன்றிகள் பல..
  எனக்கு இந்த எண்ணம் வந்தது நீங்கள் குறிப்பிட்ட இந்தக் குறளால்

  அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
  பிறன்போல நோக்கப் படும்." (1047)
  656 ம் அருமை...
  உங்கள் வழிகாட்டுதல் தேவை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி..!நன்றி.! நிறைய வாட்டர் கலந்து தர முயல்கிறேன். 'குறளுக்கு ஒரு கதை' நல்ல சிந்தனை..! இதனை பள்ளி முதல் கல்லூரி வரை ஒரு போட்டியாகக்கூட வைக்கலாம்.

   நீக்கு
 8. அய்யா வணக்கம். தாமதமான தங்களின் பதிவுக்கு மிகவும் தாமதமாக வருகிறேன். மன்னிக்க. முன்னர் எழுதிய பின்னூட்டத்தை மின்னூட்ட வெட்டு தின்றுதீர்த்ததே காரணம். அரிய தகவல்களைத் திரட்டி அழகாகத் தந்திருக்கிறீர்கள். வள்ளுவனை அறிதோறும் நம் அறியாமை காண்பதுதானே அவனது பெருமை! பள்ளியில் படிக்கும்போது படித்த குறளையே கல்லூரியில் படித்தபோதும், பின்னர் வாய்த்த பட்டறிவு தந்த படிப்பினையிலும் ஒரே குறளுக்குப் பல்வேறு பொருள்கண்ட பரிமாணம் வியக்கவைக்கும். தொட்ட அனைத்து ஊறும் சுரங்கம் வள்ளுவம் என்பதில் வழக்கேது? தங்கள் பதிவு அருமையான அனுபவ வெளிப்பாடாகவே உள்ளது. வாழ்த்துகள்.
  சில வரிகள் மட்டும்...
  “40வயதிற்குப் பின் ஆசிரியர் நேரடியாக வாழ்க்கையைப் பாதிப்பதில்லை“ ஆசிரியர் என்பவர் பள்ளியில் மட்டும்தான் பணியாற்ற வேண்டுமா? நூலாசிரியரை என்செய்வீர்? பள்ளியில் நடத்தும் பாடம் வேண்டுமானால் 40இல் முடியலாம், பாருக்கே பாடம் நடத்துவதால்தான் நூலாசிரியரியரின் என்றென்றும் நிலைநிற்கிறது. வள்ளுவன் நம் ஆசிரியத் தாத்தனல்லோ? அதனால்தானே கல்வி கரையில..?
  "ஈன்றாளின் என்ன கடவுளும் இல்"எனும் கடிகை வரியை “எண்ணக்கடவுளும் இல்“ என்றும்,
  ஈன்றாள் பசிகாண்பாள்“ எனும் குறள் வரியை, “காண்பான்“ என்றும் படித்ததாக நினைவு. சற்றே சரிபார்க்க வேண்டுகிறேன்.
  “வள்ளுவன் காலத்திலேயே உழவுக்குப் பின் வறுமை தானா...?!
  ஆமாம்.. சங்கப்புலவர் பக்குடுக்கை நன்கணியார், புறம்-164இல்,
  ”ஒருவீட்டில் சாவுப் பறை ஒலிக்கிறது, ஒரு வீட்டில் திருமணத்திற்கான மேளம் ஒலிக்கிறது. ஒருபக்கம், காதலரைச் சேர்ந்த மகளிர் பூமாலை அணிகிறாள்; இன்னொரு பக்கம் பிரிவால் வருந்தும் மகளிரின் கண்களில் இருந்து நீர் சொரிகிறது. இப்படி ஒரு சூழலைப் படைக்கும் இறைவன் பண்பில்லாதவன் தான் தானே? கொடிது இவ்வுலகம்! இதன் இயல்புணர்ந்தோர், இனியதை மட்டுமே மனத்துள் இருத்துவர்.” என்றது வேறென்ன? இணைந்தே இருப்பது..? புலமையும் வறுமையும்..ஏ.பி.நா. இந்த இடத்தில் புலமை என்பதைத் திறமை என்றும் பொருள் கொள்ளலாம்தானே? (பொருளீட்டும் வழியைத் திறமையில் சேர்த்தது நம் விழுமியத்தின் வீழ்ச்சி)
  “கொண்டுவந்தால் தந்தை, கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டுவந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன்“ - என்பது நமது சொலவடை(தூக்குத் தூக்கி படக்கருவே இதுதான்)
  நிறைவாக ஒரு கருத்து நண்பா!-
  தாயின் உயர்வை எடுத்தெடுத்துச் சொல்லியே நமதுசமூகம், தாய்என்னும் பெண்ணை அன்புச்சிறைக்குள் தள்ளியதை என்னால் ஏற்க இயலவில்லை.
  “உயிரோடு வாழ்ந்த காலத்தில் ஒருவாய்ச் சோறுபோடாதவன், அம்மாவாசை அன்னிக்கு கும்பகோணம் போய் கோதானம் செஞ்சானாம்” என்னும பழமொழி உரத்துச் சொல்லும் உண்மையே எதார்த்த நெருப்பாய் எண்ணச் சுடுகிறது!
  மற்றபடி உங்களின் பதிவு, தொடர்பதிவுகளைத் தூண்டுவதாக உள்ளது. இப்படியே பிடித்துப் போய்க்கொண்டே இருங்கள்.. இடைவேளை வேண்டாம். செந்தமிழ் உங்கள் நாப்பழக்கம் என்பதைத் தமிழகம் அறியும். வலைப்பதிவு எழுத்தும் உங்களின் வண்ணவழக்கமே என்பதை எல்லாரும் அறியட்டும்.
  வாழ்த்துகளும், வணக்கங்களும் அய்யா, நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஐயா!

  தாங்கள் என் வலைத்தளத்திற்கு வந்து இட்ட
  இனிய கருத்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
  இங்கு வருவதில் தாமதமானதற்கு வருந்துகிறேன்!...

  வள்ளுவத் தாய்தேடி வார்த்த பதிவிதனை
  உள்ளத்தி(ல்) இட்டேன் உணர்ந்து!

  தாயினைச் சிறப்பித்துக் கூறிய வள்ளுவக் குறட்பாக்களும்
  தொடர்ந்து அக்கால இக்காலக் கவிஞர்களின்
  அற்புதக் கவிதை எடுத்துக்காட்டலுமாக
  அருமையான பதிவு தந்துள்ளீர்கள்! மிகச் சிறப்பு!
  முன்பு கூறியிருக்கும் கருத்துரைகளுக்கு மேலாகக்
  கூறுவதற்கு என்னிடம் ஏதும் இல்லை..! மிக அருமை ஐயா!

  மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!

  கடந்த பங்குனி மாதத்தில் பரந்தாமன் திருவடி சேர்ந்த
  என் அன்புத் தாயை எண்ணி நானிட்ட குறட்பாக்கள் சில..

  http://ilayanila16.blogspot.de/2014/06/blog-post.html

  நேரமிருப்பின் பாருங்கள்! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...