சனி, 28 நவம்பர், 2020

தென்றல்தமிழ்...என் வலைக்காட்சிக்கு வாருங்கள்

 நாகேஷ் எனும் மகா கலைஞனின் திரைப் பயணம்..


சிரிப்பு, சோகம், ஹீரோ , வில்லன்... ஏன் பிணமாகக்கூட நடித்த நடிகன்


https://youtu.be/hpNXHeOBK1c


ஜெயகாந்தனோடு சேர்ந்து பிச்சையெடுத்தும் பார்த்த கலைஞன்பார்த்துவிட்டு தங்களின் கருத்தைப் பகிர வேண்டுகிறேன்


https://youtu.be/hpNXH eOBK1c

சனி, 7 நவம்பர், 2020

இளங்கோ படைத்த கதை மாந்தர்களின் நுண்ணுணர்வுகள்
     ம.சுந்தர் (மகா.சுந்தர்) முனைவர் பட்ட ஆய்வாளர்,
     225,பழனியப்பா நகர், திருகோகர்ணம்,புதுக்கோட்டை-2   


  
            தமிழின் முதல் காப்பியமான சிலம்பில், இளங்கோ கதை மாந்தர்களை உளவியல் அடிப்படையில் படைத்திருக்கும் பாங்கு ஆராயத்தக்கது. இளங்கோவின் கதை மாந்தர்கள் நுண்ணுணர்வுகளோடு இயங்குகிறார்கள். அன்றைய ஆணாதிக்கச் சமுதாய அமைப்பில் காம வேட்கை, நுகர்ச்சி, ஆணுக்குப் பெருமை அளிப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் பெண் என்பவள் குடும்ப அமைப்புக்குக்  கட்டப்பட்டு, ஆணைச் சார்ந்து அல்லது ஆணுக்கு அடங்கி நடப்பதே உயர்ந்த பெண்மை என்ற பொதுக் கற்பு நிலை, ஆணுக்கு விலக்கப்பட்டு இருந்தது..
                                       “சங்க இலக்கியம் கட்டமைத்துள்ள பெண்மை என்னும் கருத்தியல் மிகநுட்பமான அரசியல் செயல்திறத்தைப் பெற்றது. இது பற்றிச் சுருக்கமாகவாவது ஆய்வாளர்கள் அறிதல் வேண்டும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்புத்திறம், காம உணர்வை வெளியிடுவதின் கட்டுப்பாடு, பெண் பேசும் மொழியின் தன்மை, பெண் சொல்லாடலின் எல்லை, பெண் இயக்கத்தின் நில எல்லை முதலான பண்புகள் கவனத்திற்குரியன” என்கிற முனைவர்  சிலம்பு நா.செல்வராசு அவர்களின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.1
                                     பெண்மை மென்மையானது; ஆண்மையே வலிமையானது; பெண்மை என்பது ஆணின் உடைமைப் பொருளாகும்’ என்ற சமூகச் சிந்தனை வலுப்பட்டிருந்தது. இத்தகைய சமூகச் சிந்தனையின் அடிப்படையில், நுண்ணிய உணர்வுகளோடு இளங்கோ கட்டமைத்திருக்கிற கண்ணகி, மாதவி, கோவலன் ஆகியோரின் பாத்திரப் படைப்புகளை ஆராய்வதே கட்டுரை நோக்கம்.
              கண்ணகி 

        “போதிலார் திருவினாள் புகழுடை வடி வென்றும்
         தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்
         மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
         காதலாள் பெயர்மன்னும்கண்ணகி யென்பாள் மன்னோ!!”
                   (சிலப்பதிகாரம், மங்கள வாழ்த்துப் பாடல், 26-3௦)                                 என இளங்கோ                                                கண்ணகியைக் காட்டும்போதே, கட்டுப்பாடான பெண்ணாகக் காட்டுகிறார். பேசாமடந்தையாகக் கண்ணகி புகர்க்காண்டம் முழுவதும் காட்டப்படுகிறாள். மனையறம் படுத்த காதையில் கோவலன் உணர்வின் உச்சத்தில் நின்று “மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!” என்று உலவாக் கட்டுரை பல மொழியும்போதும் கண்ணகி, நாணத்தோடு அமைதியாக இருக்கிறாள்.
 “கட்டற்ற இயற்கையான காம வெளிப்பாடு ஆடவர்க்குச் சாத்தியம்; கோவலனின் நீண்ட பேச்சு இதனைக் குறிப்பாக உணர்த்துவது எனலாம். கண்ணகி பேசுவதில்லை. சமூகச் செயல்பாட்டில் ஆணுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாலியல் பங்கு நிலை கட்டற்று இருப்பதே இங்கு வெளிப்படுவது” என்று முனைவர் துரைசீனிச்சாமி குறிப்பிடுவது பொருத்தமானது.2
 கோவலன் தன்னை விட்டுப் பிரிந்து மாதவியிடம் மையல் கொண்டு அவளுடனே வாழ்ந்த போதும் கண்ணீருடன் பொறுமையாக இருக்கிறாள்.
              தன் கண்ணீருக்குக் காரணம் மாதவியே என்று, ஒரு போதும் மனதினால் கூட அவளைப் பழித்துரைக்கவோ, இடித்துரைக்கவோ இல்லை. கணவனை மாதவியிடம் இருந்து மீட்க முயற்சியும் செய்யவில்லை. கோவலன் மனம் திருந்தி மனையகம் வந்தபோதும் கூட பொங்கிஎழாமல் ‘நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்’ சிலம்பு தருகிறாள்.         மதுரைக்காண்டத்தில் வேட்டுவ வரியில், சாலினி தெய்வ நிலை அடைந்து கண்ணகியைக் கொங்கச்செல்வி, குடமலையாட்டி தென்தமிழ்ப் பாவை, தவக்கொழுந்து எனப் பாராட்டும்போது நாணமடைந்து,’அறியாமையால் ஏதோ கூறுகிறாள்’ என அந்தப் பாராட்டுரையை ஏற்காமல் கணவன் முதுகுப் புறத்து மறைந்து நிற்கிறாள். இப்படிப் பெண்மையின் உச்சமாக, மென்மையின் உச்சமாகக் கண்ணகி இளங்கோவடிகளால் காட்டப்படுகிறாள்.
     கொலைக்களக்காதையில் கோவலன் தன் தவறுக்காக மனம் வருந்தி, “எழுக என எழுந்தாய் என் செய்தனை?” என கேட்டபோது கண்ணகி உரைத்த மறுமொழி அவளின் குணநலன்களை நுட்பமாக விளக்குகிறது.      
     “போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும்
      மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
      ஏற்று எழுந்தனன் யான்”.(சிலப்.கொலைக் களக் காதை,81-83)
என்ற கண்ணகியின் வார்த்தைகளில், அவள் உள்ளக் குமுறல் முதன்முறையாக மென்மையாக வெளிப்படுகிறது.
      “மாற்றா உள்ள வாழ்க்கையேன்”...என்ற வரிகளின் மூலம், வாழ்க்கையை அதன் வழிப்படி அப்படியே ஏற்றுக்கொள்பவள்: (life as it is)விதியை நம்புபவள் என்பதனை நுட்பமாகப் பதிவு செய்கிறாள்.
       இப்படி இருந்தவள்,கோவலன் கொல்லப்பட்ட செய்தியறிந்து,சீறி எழுகிறாள்.அவளுக்குள் அடங்கியிருந்த சினம் சீற்றமெடுக்கிறது. பொறுமையின் உச்சமாக இருந்த கண்ணகிக்குள் மாற்றம் நிகழ்கிறது. குண நலனில் பெரும் மாற்றம் ஏற்படும்போது,உடலிலும் அது மாற்றத்தை ஏற்படுத்தும்.
       “பொங்கி எழுந்தாள்:விழுந்தாள்” என இளங்கோ  உலகியல் நுட்பத்துடனும், உளவியல் நுட்பத்துடனும் பாடியுள்ளார் என்ற அரு.சோமசுந்தரன் அவர்களின் கருத்து நுட்பமானது.3
       ‘பேசா மடந்தை’ கண்ணகி, ‘தேரா மன்னா’ என நெருப்பு வார்த்தைகளால் பாண்டிய மன்னனைச் சுட்டெரிக்கிறாள்.’மாற்றா வாழ்க்கையை உடையவள்’,தன் கணவன் மேல் விழுந்த கொலைப்பழியை மாற்றும் வழியைத் தேர்வுசெயகிறாள். மென்மைக்குள் அடங்கியிருந்த வன்மை வெளிப்படுகிறது.
“அமைதி, மூர்க்கம், உணர்வுகளைக் கடந்த தெளிந்த காட்சியள் என மாறி, இறுதியில் தெய்வமாகவே மாறிவிடுகிறாள்” என்கிறார் முனைவர் துரைசீனிச்சாமி.4 
           மாற்றும் மாதவி  
     மாதவி எந்தச் சூழலையும், தனக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் தொய்வில்லாமல் இயங்கும் உணர்வுகொண்டவளாகக் காட்டப்படுகிறாள்.
       ‘விடுதல் நீங்கா விருப்பினனாய்’ கோவலன் தன்னுடனே இருப்பதற்காக, “கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து”, கோவலனைத் தன்வயப்படுத்துகிறாள்.
    கானல்வரியில் ஊழினால் கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்தபோது,பெரிதும் வருந்துகிறாள் மாதவி.
     காதலன் பிரிவைத் தாங்க முடியாத மாதவி, கோவலனுக்கு ஒரு காதல் கடிதம் எழுதி, வயந்தமாலையிடம் கொடுத்தனுப்புகிறாள். கோவலன் ஏற்க மறுத்தும், தன் முயற்சியையோ, நம்பிக்கையையோ மாதவி இழக்கவில்லை.
     “மாலை வாரார் ஆயினும் மாணிழை
     காலை காண்குவம்” (சிலப். வேனில் காதை, 115-116)
என்று,மாலை வராவிட்டாலும், காலை நிச்சயம் வருவார் என்று நம்பிக்கை கொண்டாள்.
         மாதவியின் விடாமுயற்சி
   
       இரண்டாம் கடிதத்தைக் கெளசிகனிடம் ‘கண்மணி அனையாற்குக் காட்டுக’ என்று, கொடுத்து அனுப்புகிறாள். கோவலன் மாதவியை வெறுத்து, கண்ணகிக்காக வருந்தி, மதுரைக்குச் செல்லும் வழியில் கடிதம் கோவலனிடம் கொடுக்கப்படுகிறது. இம்முறை மாதவி கோவலனை ஈர்க்க,நறுநெய் வாசம் கமழும் கூந்தல் முத்திரை இட்டு அனுப்புகிறாள்.
       “உடனுறை காலத்து உரைத்தநெய் வாசம்
        குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
        காட்டியது ஆதலின் கைவிடல் ஈயான்”
                    (சிலப். புறம் சேரி இறுத்த காதை, 83-85)
பழைய வாசனை,கோவலனை மயக்கியது .மாதவியின் மேலிருந்த வெறுப்பு மாறி,விருப்புடன், ”தன்தீது இலள்”..”என்தீது” எனக் கோவலனைப் பேச வைத்தது.
        கோவலன் கொலையுண்ட செய்தியறிந்து,மாதவி தன் கூந்தல் களைந்து பௌத்தத் துறவி ஆனாள். குல ஒழுக்கத்திற்கு எதிராகத், தன் மகள் மணிமேகலையையும் துறவியாக்கினாள்.
      இவ்வாறாக, கலையரசி மாதவி தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும், இறுதிவரை எதையும் மாற்றும்  முயற்சி உடையவளாகவும் இயங்குகிறாள்.    
      விடுதல் அறியா விருப்பினன்
      முறைப்படுத்தப்படாத காம வேட்கை, குடும்ப அமைப்பைச் ,சமூக ஒழுங்கைச் சிதறச்செய்யும் என்பதற்குக் கோவலன் பாத்திரமே நல்ல சான்றாகும்.
      உணர்வின் உச்சத்தில் நின்று இயங்குதல், புகழ்ச்சியை விரும்புதல், பிறரைப் புகழ்ந்து மகிழ்தல்,மீளாக் கலை வேட்கை...இப்படிக் கோவலன் காப்பியம் முழுதும் இயங்குகின்றான்.
      கோவலன் அறிமுகத்திலேயே,
    “பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
     கண்டெத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால்
    கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ”..
             (சிலப். மங்கல வாழ்த்துப் பாடல், 37-39)
கோவலனைப் .பெண்கள் ஆயத்துப் பாராட்டுப் பெறுவதில் அதிக விருப்பினனாகக் காட்டுகிறார்.
        கோவலனின் கலையுணர்வு, ‘மனையறம் படுத்த காதையில்’ வெளிப்படுகிறது. அவனுள் ஊற்றெடுக்கும் உணர்ச்சி, ‘உலவாக் கட்டுரையாக’
வெளியாகிறது. கலையுணர்வு மிக்கக் கோவலன், கலையரசி  மாதவியின் ஆடல் கண்டு மயங்கியது ஒன்றும் வியப்பில்லை. காதல் மனைவி கண்ணகியை மறந்தான்; ’விடுதல் அறியா விருப்பினனாக’ இருந்தான் என,உணர்வின் மிக்கோனாகக் கோவலன் காப்பியம் முழுதும் இயங்குகிறான்.
       மாதவியிடம் வாழ்ந்த போதிலும், கண்ணகியைப் பிரிந்த குற்ற உணர்வும், மாதவியின் குல ஒழுக்கம் குறித்த பொதுச் சிந்தனையும், ஊழ்வினையும் ‘கானல் வரிப் பாட்டாக’ வெளிப்படுகிறது.  மாதவியும் காவிரியை மையமாக வைத்துப் பாடுகிறாள்.
 முடிவில் தீராக் காதல் உடைய மாதவியை,
        “மாயப் பொய் பலகூட்டும் மாயத்தாள்”, எனக் கோபத்தின் உச்சத்தில் நின்று பழி தூற்றுகிறான். மாதவி கணிகையர் குலத்தில் பிறந்தவள் என்ற பொதுச் சிந்தனை, மாதாவின் தூய அன்பினைக்கூட ஐயுறவைக்கிறது.      மனையகம் சேர்ந்து கண்ணகியிடம்,
      “சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடி”, என மாதவியை ‘வஞ்சம் பொருந்திய பொய்யுரையாள்’ என்றும் குற்றமில்லாக் கோதையைக் குற்றம் சுமத்துகிறான். மாதவி தனக்கு மட்டும் இல்லையோ என்கிற ஐயம் அவனைப் பேசவைக்கிறது. உணர்வு நிலையில் இயங்குபவர்கள், அடிக்கடி ஐயம் கொள்வார்கள் என்பதுதானே உளவியல் உண்மை.
         பின், மாதவியின் இரண்டாம் கடிதம் பார்த்து,
     “தன்தீது இலள், என் தீது” என உணர்கிறான். இப்படி நிலையற்ற மனம் கொண்டவனாய் கோவலன் காட்டப்படுகிறான்.
                    கொலைக்களக் காதையில், மனம் நெகிழ்ந்த கோவலன்,
             “இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்
             சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்”,
                   (சிலப். கொலைக் களக் காதை, 67-68)
 எனத் தன் தவறினை ஏற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம். பின்பு கண்ணகியை
             “பொன்னே,கொடியே,புனைபூம் கோதாய்” என  உருகி,உருகி வருணிக்கிறான்.
                     கோவலனின் இசையார்வம்
    வாழ்வை மீட்பதற்காக, மதுரைக்குக்  கண்ணகியுடன் செல்லும்போது, கொற்றவையைப் போற்றிப் பாடிக்கொண்டிருந்த பாணரோடு தானும் கலந்து யாழிசைத்துப் பாடுகிறான் கோவலன்.
      “ஆடுஇயல் கொள்கை அந்தரி கோலம்
       பாடும் பாணரில் பங்குறச் சேர்ந்து”
       .      (சிலப். புறம் சேரி இறுத்த காதை, 1௦4-1௦5) கோவலனின் தன்னிலை மறந்த இசையார்வம் தெரியவருகிறது.
       இங்ஙனம் உணர்வுமிக்கோனாய், காமத்திலும்,இசையிலும் விடுதல் அறியா விருப்பினனாய் வாழ்ந்த கோவலனின் கலை வாழ்வு உளவியல் நுட்பத்துடன் இளங்கோவால் கட்டமைக்கப்பட்டிருகிறது.
          உளவியல் நுட்பத்தோடு, சமூக மரபு சார்ந்து, இளங்கோவடிகள் கதை மாந்தர்களை நுண்ணுணர்வு மிக்கவர்களாய் உருவாக்கியிருக்கும் பாங்கு போற்றத்தக்கது.
துணை நூற்கள்
 1.சிலப்பதிகாரம் –முனைவர் ச.வே.சுப்பிரமணியன் உரை- கங்கை புத்தக நிலையம்.
2.இலக்கிய ஆராய்ச்சி- தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கான தொகுப்பு இதழ்-1 டிசம்பர் ௨௦௦9 (1.சங்க இலக்கியமும் பெண்மை உருவாக்க அரசியலும்-முனைவர் சிலம்பு நா.செல்வராசு)
3.சிலப்பதிகாரம்: கதையும் கருத்தியலும்- முனைவர் துரைசீனிச்சாமி (2&4)

ஞாயிறு, 26 மார்ச், 2017

சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை

சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை 

         மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதுதான் கவிதை. கவிஞர்களின் உலகம் வேறு; நாம் காணும் உலகம் வேறு. கவிஞர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவதைகளோடு வாழ்கிறார்கள்.வாழ்வின் கடக்க முடியாத் தூரங்களை,துயரங்களைத் தாண்டுவதற்கு, தேவைதைகள் அவர்களுக்குத் துணை புரிகிறார்கள்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தேவதைகளின் காதலன் (பகுதி 2)

உணர்வுகளில் ஒளியேற்றுவது மட்டுமல்ல; உண்மைமைகளை நுட்பமாக உரைப்பதும் கவிதையின் அவசியமாகிறது.தேவதைகளும் சாத்தான்களும் நிறைந்தது உலகு. தேவதைகளின் உருவில் சாத்தான்கள் உலவுவது இயல்பே. இங்கு பொய்கள், உண்மைகளின் உருவத்தோடு உலா வரும். புகழுரைகளைத்  தன்னருகில் நெருங்கவிடாது, நிறுத்துப் பார்க்கும் மனம் அவசியம். புன்சிரிப்புகளில் கூட போலிகள் உண்டா? இதோ கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதை பாருங்கள்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

தேவதைகளின் காதலன் (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வைதேவதைகளின் காதலன்

 (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வை)

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் ஒன்பதாவது நூல் 'தேவதைகளால் தேடப்படுபவன்'. செய்நேர்த்தி மிக்க நகைத்தொழிலாளி நுட்பத்தோடும் அழகோடும் ஆபரணம் செய்வதைப்போல், கவிதைகளை இயற்றியுள்ளார்.

சனி, 14 ஜனவரி, 2017

அது எந்தத் தை..?!

அது எந்தத் தை..?!     “கடல் மிசை உதித்த பரிதியின் செங்கதிர்  
     வானெல்லாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்!
     புவியின் சித்திரம் ஒளியில் பொலிந்தது!
     இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்”
வானச் சூரியன் வனப்பை, அதனால் ஒளி பெரும் உலகை பாவேந்தர் வார்த்தைத் தூரிகை கொண்டு வரைகிறார்.  

                இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் நம் தமிழினம். இயற்கையை, உழைப்பை, உழவைத் தமிழனைப்போல் நேசித்தவர் உலகில் எவருமிலர். உழைப்பின் உயர்வை, நிலத்தின் மாண்பை, நன்றியுணர்வின் நாகரிகத்தை மன்பதைக்குக் காட்டும் விழா பொங்கல் விழா! மார்கழிப் பனிக்காலம் நிறைவுற்று, நம் வாழ்வில் ஒளியேற்றுகின்ற ‘தை மகள்’ பிறக்கிறாள்.

வெள்ளி, 30 டிசம்பர், 2016

கவிராசன் பாரதிக்கு ஒரு கவியஞ்சலி

கவிராசன் பாரதிக்கு ஒரு கவியஞ்சலி

        புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் நடத்திய கவி

யரங்கில் என் கவிதை இதோ.

                ரௌத்திரம் பழகு!!!!!
நகரத்தார் அரங்கினில்
அகரத்தை நம் அன்னை மொழி அதனைச்

சிகரத்தில் ஏற்றி வைத்த செந்தமிழன் பாரதிக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

கவிராசன் கழகமதில்
கவியரங்கம்  கேட்க
செவியோடு வந்திருக்கும்
செந்தமிழ்ப் பாவலர்காள்
அனைவருக்கும் என் வணக்கம்!!


துருப்பிடித்த உவமைகளால் மங்கிப்போன
   தூர்ந்துவிட்ட கற்பனையால் துவண்டு போன
இருளடைந்த இலக்கியத்தைச் சாணை தீட்டி
   இருந்தமிழைச் சீர்செய்தான் இனிமை கூட்டி
நெருப்பினிலே சொல்லேடுத்தான் தமிழும் ஆள!
   நேர்மை எனும் வில்லேடுத்தான் பகைமை மாள
அரும்பல்ல அவன்கவிதை வலிமை கூட்டி
   ஆதிக்கத்தின் அடிவேரில் பாயும் ஈட்டி !

Related Posts Plugin for WordPress, Blogger...