சனி, 14 ஜனவரி, 2017

அது எந்தத் தை..?!

அது எந்தத் தை..?!     “கடல் மிசை உதித்த பரிதியின் செங்கதிர்  
     வானெல்லாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்!
     புவியின் சித்திரம் ஒளியில் பொலிந்தது!
     இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்”
வானச் சூரியன் வனப்பை, அதனால் ஒளி பெரும் உலகை பாவேந்தர் வார்த்தைத் தூரிகை கொண்டு வரைகிறார்.  

                இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் நம் தமிழினம். இயற்கையை, உழைப்பை, உழவைத் தமிழனைப்போல் நேசித்தவர் உலகில் எவருமிலர். உழைப்பின் உயர்வை, நிலத்தின் மாண்பை, நன்றியுணர்வின் நாகரிகத்தை மன்பதைக்குக் காட்டும் விழா பொங்கல் விழா! மார்கழிப் பனிக்காலம் நிறைவுற்று, நம் வாழ்வில் ஒளியேற்றுகின்ற ‘தை மகள்’ பிறக்கிறாள்.
உழைத்துக் களைத்த உழவன், வியர்வையின் விளைச்சலைக் கண்டு உளம்பூரிக்கின்ற உன்னதத் திருநாள்தான் பொங்கல் பெருநாள்! கருவுயிர்த்து, பத்துத் திங்கள் மடிசுமந்து, மகவீன்று மகிழும் தாய்போல், மண்மாதா மடிசுமந்த விதையெல்லாம், நெல்லாய் வளர்ந்து நிற்கின்ற நாள் தை முதல்நாள்.
           ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது உழவை உயிர்போல மதித்த தமிழர்களின் வழிவழியான நம்பிக்கை! உழவனுக்கு நிலமே கடவுள்; உழைப்பே தியானம், வழிபாடு; உணவே பிரசாதம். உடலுழைப்பை மதித்த காலத்தில் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது நம்பப்பட்டது. ‘விளைநிலங்கள்’ எல்லாம் ‘விலைநிலங்களாக’ மாறிய  இன்று..? உலகின் பசியாற்றிய உழவன், இன்று நியாவிலைக்கடைகளில் நிற்கும் அவலத்தை பார்த்தால், ‘எந்தத் தையில் வழி பிறக்கும்..?’ என்ற ஏக்கமே ஏற்படுகிறது.
      “ஏழைவைத்த வாழைமரம் இருபுறமும் குலைதள்ளும்
      நாளைவரும் அவனுக்கு  நல்லதொரு  புதுவிடியல்
      இப்படியோர் பூங்கனவில் எத்தனையோ யுகம்கழிந்தும்
      அப்படியோர் பொற்பொழுது அவன்வானில் ஏனில்லை..?
      ..........................................................................................................................
      தந்தைமார் சொன்னார்கள் தையில்வழி பிறக்குமென்று
      எந்தத் தையில் என்று எழுதிமட்டும் தாருங்கள்!”
கவிஞர் வைரமுத்துவின் வினாவிற்கு விடை கிடைக்கும் நாள் எந்நாளோ..?

உழவிற்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் நாள் எதுவோ..?
     “மண்படு மரபில் மானிட சாதி பண்படுமே அதைப் பண்பாடென்க” என்றார் கவியரசு கண்ணதாசன். நிலத்தைப் பண்படுத்தியபோதே மனித இனமும் பண்பட்டது. வேட்டையாடி வாழ்ந்த மனிதன், வேளாண்மை செய்த பிறகுதான் தானும் உண்டு, பிறர்க்கும் ஈந்து மகிழ்ந்தான். தமிழில் ‘வேளாண்மை’ எனும் சொல்லுக்கு ‘உதவி’ என்ற பொருளும் உண்டு.
     “மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
      உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
என உணவை வழங்கும் உழவர்களை உயர்த்தினார் சீத்தலைச் சாத்தனார். உழவைக் கீழானவர்களின் தொழிலாக மனுஸ்ருமிதி காட்டியபோது, “உழந்தும் உழவே தலை” என்று உழவனே தலையானவன்- மேலானவன் என வள்ளுவப் பாட்டன் உயர்த்தினான். ஆனால் இன்று..? யானை கட்டிப் போரடித்த தமிழனின் வயல்கள் ‘ரியல் எஸ்டேட்டுகளாக மாறியதேன்?.! அரசும் அதிகார வர்க்கமும் மல்லையாக்களுக்கும் அம்பானி, அதானிகளுக்குத் தரும் மதிப்பை, அதனில் அணுவளவாவது உழைக்கும் வர்க்கத்திற்குத் தந்திருந்தால் உழவு செழித்திருக்குமே!.
          இன்று கிராமங்களில் விவசாய வேலைகளைச் செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. எல்லோரும் நூறுநாட்கள் வேலைக்குச் செல்வதையே விரும்புகின்றனர். உணவுத்தேவை பலமடங்கு அதிகரித்துருக்கிற வேலையில், உணவு உற்பத்தி குறைந்தால் எதிகாலத்திற்கு எதைச் சாப்பிடுவார்கள்..? தன்னை ‘விவசாயி’ என்று சொல்லிக்கொள்வதற்குக்கூடக் கூச்சப்படுகிற நிலையில், விவசாயி இருக்கிறானென்றால் அதற்கு வெட்கப்பட வேண்டியது சமுதாயம்தான்.
   விவசாயத்தை மதிக்காத சமூகத்தில் ‘தை பிறந்தால் எப்படி வழி பிறக்கும்..?’
     உடலுழைப்பை மதிக்காத சமூகம்
      உழவை மட்டுமல்ல; உழைப்பையும் மதிக்காத, கேவலமாக நினைக்கின்ற சமுதாயம் எப்படி உயர்வு பெறும்?.
      சோம்பலுக்கெதிராக ‘மடியின்மை’ என்னும் அதிகரத்தையே படைக்கிறான் நம் பாட்டன் வள்ளுவன். சுறுசுறுப்பின்றி சோம்பித்திரியும் பேதை பிறந்த குலம், அவனுக்கு முன்னமே அழிந்து போகும் என எச்சரிக்கை விடுக்கிறான் வள்ளுவன்.
         “மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
         குடிமடியும் தன்னினும் முந்து.”
உழைப்பவன் கீழானவன், அழுக்கானவன் என்ற எண்ணம் சமுகத்தில் ஆழப்பதிந்துவிட்டது. இந்தக் கரையை எப்படிப் போக்குவது..?
         “வெந்நீரில் குளிப்பவனா தூய்மையானவன், இல்லை  
         வியர்வையில் குளிப்பவனே தூய்மையானவன்!”.
என்ற கவிஞர் விவேகாவின் கவிதை வியர்வையே உயர்வு என்பதையல்லவா காட்டுகிறது.
          உண்மையில்
         கண்ணீரை விட
         உயர்வானது வியர்வை!
         அதனால்தான்
         அழுவதைப்போல்
         நடிக்க முடிகிறது
         வியர்ப்பதைப் போல்
         நடிக்க முடியவில்லை!
இவை கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் வரிகள்.
   
         “நகம் வளர்க்கும் விரலகளல்ல அவன் விரல்கள்- உலகின்
         சுகம் வளர்க்கும் விரல்கள் –அவன்
         கைமுடங்கிப்போனால் உலகின்
         மெயமுடங்கிப் போகும்”
என்னும் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் வரிகள் எவ்வளவு ஆழமானவை!
உழைப்பைப் போற்றுகின்ற அந்த உன்னதத் திருநாள் எந்நாளோ..?

தமிழனின் வீரம் செறிந்த ஏறு தழுவுதல்
       “கொல்லேற்று கோடஞ்சுவானை மறுமையிலும்    புல்லாளே ஆயர் மகள்” என்று தமிழரின் வீரம் செறிந்த வாழ்வை குறிஞ்சிக்கலி கூறும். மண்ணை நேசிக்கின்ற தமிழன் , மாடுகளையும் தன் குடும்ப உறுப்பினர்களுள் ஒருவராக நினைப்பது நம் பண்பாடு. ‘மஞ்சுவிரட்டுக்கு’ தடை என்பது நம் பண்பாட்டின் ஆணிவேரில் அமிலம் பாய்ச்சும் செயலல்லவா? தடை நீங்கும் தை எந்தத் தையோ..?  
அது எந்தத் தை..?
           உலகத் தமிழர்களையெல்லாம் உணர்வுகளால் ஒன்றாக்கும் தைத்திருநாள் மலர்ந்தது. நம் நீண்டநாள் நெடுங்கனவுகள் எல்லாம் நனவாகும் நாள் என்றுவருமோ என நம் மனம் ஏங்கித் தவிக்கிறது. கவிஞர் பழனிபாரதி அவர்களின் கவியரங்கக் கவிதையொன்றின் சிலவரிகள்  நினைவில் ஒலிக்கிறது.
           “எப்படிப் போக்குவது இந்தத் தை ஏக்கத்தை?
           உலகத் தமிழரெல்லாம் கனவுகண்ட ஈழத்தை!
           கனவுகண்ட கண்ணிமைகள் கருகிவிட்ட சோகத்தை!
           எப்படிக் கடப்பது இந்தக் கண்ணீரின் தூரத்தை?
           இனிக்கின்ற கரும்பெல்லாம் கசக்கின்ற தோட்டத்தை!
           செத்தபடிக் கிடக்கின்ற சம்பாவின் வாட்டத்தை
           நதிகளுக்குள் மணல்திருடி விற்கின்ற வணிகத்தை
           பண்பாட்டுப் படையெடுப்பில் முகமிழக்கும் கிராமத்தை
           போதையிலே தள்ளாடும் வாலிபத்தின் போகத்தை
           யார்யாரோ நமைப் பிரித்த சாதிமத பேதத்தை
           தன்மானம் விற்றும் உயிர்வாழும் சோரத்தை
           அந்நியர்கள் மொழிதன்னை கொண்டாடும் ஈனத்தை
           தாய்த்தமிழை மறந்திருக்கும் தமிழர்களின் ஊனத்தை
           யார்வந்து துடைப்பாரோ இத்தகைய அவலத்தை
           அவருக்குச் சொல்கின்றேன் என்கவிதை வணக்கத்தை..!”
துயரங்கள் போக்குகின்ற தை பிறக்கட்டும்: தமிழர் வாழ்வு சிறக்கட்டும்

6 கருத்துகள்:

 1. சிந்திக்க வேண்டிய பல கேள்விகள் ஐயா... அருமை...

  பதிலளிநீக்கு
 2. எப்போது தைமகள் வருவாள்.... என்று என்ற கேள்வி பலரது மனதிலும்.....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. நான்கு கால் செல்வங்களுக்கு
  நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
  பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
  பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
  தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  அருமையான கண்ணோட்டம்

  பதிலளிநீக்கு
 4. சிலப்பதிகாரத்தை உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள் என்பார்கள். உங்கள் எழுத்தை, கவியிடையிட்ட கட்டுரை என்று சொல்லவேண்டும்போல அப்படி ஒரு கவிதை ரசனை உங்களிடம்... தொடருங்கள். உரைநடையில் உங்கள் பாணியைக் கண்டு பிடிக்க தொடர்ந்து எழுதுங்கள். முன்னர் எழுதியதிலும் முதிர்ச்சி தெரிகிறது. விடாதீர்கள். அடுத்த கட்டுரை எப்போது?

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...