வியாழன், 19 நவம்பர், 2015

வருக! கவியரசர் புகழ்பருக !

வருக! கவியரசர் புகழ்பருக  !

அள்ளஅள்ளக் குறையாத
   அமுதமெனத் திருக்குறளால்
தெள்ளெனவே வழிசொன்னான்
   திறம்படைத்த தேவனவன்!

செங்கரும்புச் சாறெடுத்துச்                  
  சந்தமிகு கவிசெய்தான்
தங்கமென வந்திட்ட
  தமிழ்க்கவிஞன் கம்பனவன்!


விஞ்சுகின்ற மொழியாலே
  வீரமகள் கதைசொல்லி
நெஞ்சையள் ளும்சிலம்பில்
  நிமிரவைத்தான் நம்மிளங்கோ!

யுகநெருப்பைப் பற்றவைத்து
  ஊரெங்கும் கனல்பரப்பி
செகமனைத்தும் அதிர்ந்திடவே
  சினம்கொண்டான் பாரதியே!

தாயவளாய் நமைத்தாங்கும்
  தமிழமுதைப் பழித்தவரை
நாயெனவே இகழ்ந்திட்டான்
  நறுக்குமீசைக் கவிஞனவன்!


 உழைக்கின்ற தோழர்களின்
  உயர்வுக்காய்ச் சிந்தித்துக்
களிப்புறவே பாடிவைத்தான்
  கல்யாண சுந்தரன்தான்!

திரையிசையில் தித்திக்கும்
  தீந்தமிழால் பாசெய்து
நரையில்லாத் தமிழுக்கு
  நலம்சேர்த்தான் கண்ணதாசன்!

எண்ணற்ற இயக்கங்கள்
  எம்தமிழைப் போற்றுதற்கு!
கண்ணியமாய்ப் பண்புதன்னைக்
  காக்கின்ற புதுக்கோட்டை!

ஏங்கிநிதம் தவிப்போர்க்கு
  ஏராளம் உதவிசெய்யும்
பாங்கான சான்றோர்கள்
  பலர்மிகுந்த புதுக்கோட்டை!

கவியரசர் பேரவையும்
  கனிவோடு அழைக்கிறது!
கட்டாயம் வந்திடுவீர்!
  கவிச்சுவையைப் பருகிடவே!

10 கருத்துகள்:

 1. அழைப்பே இத்துனை சுவையென்றால்
  விழாவின் சிறப்பினைச் சொல்லவும் வேண்டுமோ

  பதிலளிநீக்கு
 2. ஐயா, தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!
  இயன்றால்,விழாவுக்கு வாருங்கள்..!

  பதிலளிநீக்கு
 3. அழைப்பிதழ் கவிதை அழகு கவிஞரே வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. ஓவியக் கலைஞரின் தமிழ் ஓவியக் கவிதை. பாராட்டுக்கள். வருகின்ற பதிவினில் கவிச்சுவை பருகும் இடம், நாள், நேரம் சொன்னால் நன்றாய் இருக்கும் ஓவியக் கவிஞரே! (தங்களுக்கு ஓவியக் கவிஞர் பட்டம் பொருந்தும் என நினைக்கின்றேன்)

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்

  அழைப்புக்கு சாற்றிய கவிமாலை கண்டு மகிழ்ந்தேன் சிறப்பான சொல்வீச்சு... நயம் மிக்க வரிகள் நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. தி.தமிழ் இளங்கோ ஐயா சொன்னது போல் தகவல் வேண்டும் ஐயா...

  பதிலளிநீக்கு
 7. கவிதைப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தவர், தகுதியானவர்தான் என்பதை மீண்டும் காட்டியிருக்கிறீர்கள் சுந்தர். வாழ்த்துகள். எளிய நடை எளிய சொற்கள், அரிய கருத்துகள். அப்படியே மின்னஞ்சலில் எனக்கனுப்பிய அழைப்பிதழையும் ஏற்றியிருந்தால் தமிழ்இளங்கோ அய்யாவும், வலைச்சித்தரும் இந்தக் கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க ஒருவேளை கேட்டதும் கொடுக்காலாம் என்று இருக்கிறீர்களோ? அதுவும் சரிதான். அழைப்பிதழைப் போடுங்கள்..அடுத்த பதிவில்..?

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்.

  கவிஞர்களின் புகழ் சொல்லி ஒரு கண்ணிகளின் வழியாக ஒரு கவிதை அழைப்பு..!!!

  இனிமை.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. கவிதையால் அழைப்புத்தந்தகவியேவாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. ஐயா தாங்கள் வேலைப்பலுவால் வலைப்பக்கம் வருவதில்லயோ என
  நினைத்து ஒரு தகவலைக்கூறாமல் விட்டு விட்டேன், நா.மு அண்ணாவின்வலைப்பக்கம் பார்த்துதானிங்கு வந்தேன், கில்லர்ஜியின்கடவுளைக்கண்டேன் தொடர்பதிவில் நானும் இணைக்கப்பட்டேன் நான்தங்களது10 ஆசைகள்
  கூற எனது வலைப்பக்கம் தங்களையும் இணைத்துள்ளேன். ஏக்கங்கள் என்றதலைப்பில்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...