செவ்வாய், 11 அக்டோபர், 2016

தயவுசெய்து கல்லெறியுங்கள்..!


தயவுசெய்து கல்லெறியுங்கள்..!

இனி வீணைகள்
விரல்கள் பார்த்தே
இசையை எழுப்பும்.....!
ஞானசம்பந்தர்களுக்கு ஞானப் பாலும்,
மற்றவர்க்கு கள்ளிப்பாலும்
கல்விப்பாலாய் வழங்கப்படும்.
வெள்ளைத் தாமரை
காவியாகும்.....
இனி அன்னப்பறவைகள்
பாலைத் தவிர்த்து கள் உண்ணும்.
தேவகுமாரனும் தேவகிகுமாரனும்
அவதரித்த
மாட்டுத் தொழுவம்போல்  
அரசுப் பள்ளிகள் மாற்றப்படும்.
அமுதம்தரும் நூற்கடலில்
வரும் நஞ்சு
கண்ணப்பர்களுக்கும் நந்தன்களுக்கும்
பகிர்ந்தளிக்கப்படும்....
தேவகுமாரர்கள்
முள்மகுடம் சூட்டப்பட்டு
தேர்வுச் சிலுவையில்
அறையப்படுவார்கள்
யூதாஸ்களுக்கு
தேவகுமாரன் பட்டம் வழங்கப்படும்.
இவர்கள் அறிந்தேதான்
தவறு செய்கிறார்கள்...
இவர்களை மன்னியாதீர்..!
கயமைகளை எதிர்த்து
தயவுசெய்து கல்லெறியுங்கள்..!
அப்போதுதான்
உண்மை உயிர்த்தெழும்..!
                   ...முனைவர் மகா.சுந்தர்

3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...