செவ்வாய், 22 மார்ச், 2016

கதை.2.எது கல்வி?

எது கல்வி ?

தேர்வுக் காலம் இது. மாணவக் கண்மணிகளுக்குச் சோதனையான காலம். வினாக்களின் வெப்பம் தாங்கமுடியாமல், கருகிவிட்ட மலர்களின் சோகக் கதைகள் சொல்லிமாளாதவை!

எது கல்வி? எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க வேண்டும்?..இதோ கதை..2 

 குரு தம்மிடம் படித்த மூன்று மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறி விடையளித்தார். நிறைவாக ஒரு தேர்வு வைத்தார். மூன்று மாணவர்களுக்கும் தனித்தனியாக ஒரே அளவுள்ள மூன்று பாறைகள் காட்டப்பட்டன.

குரு சொன்னார்,"உங்களுக்குக் காட்டப்பட்ட பாறையை உருத்தெரியாமல் ஆக்கவேண்டும். இது தான் உங்களுக்கான தேர்வு".

முதல் மாணவன் பாறையைப் பார்த்தான். "எனக்கு ஓர் அளவுகோலும்  மண்வெட்டியும், கடப்பாரையும் தாருங்கள்" என்றான். அளவுகோலை வைத்து அந்தப் பாறையின் நீள அகலங்களை அளந்தான். அதே அளவுள்ள குழி வெட்டி, அந்தக் குழியில் அந்தப் பாறையை  இழுத்துப் போட்டு மறைத்தான். "குருவே,அந்தப் பாறை இருந்த இடம் தெரியாமல் மறைத்துவிட்டேன்" என்றான்.

இரண்டாம் மாணவன் பார்த்தான். "எனக்கு உளி, சுத்தியல்,வெடிமருந்து இவைகள் வேண்டும்" என்று கேட்டான். அவன் அந்தப் பாறையில் நீளமான துளையை ஏற்படுத்தி, வெடிமருந்தை நிரப்பி, வெடிக்கச்செய்தான். பாறை சுக்கு நூறாக உடைந்தது.குரு சிரித்தார்.

மூன்றாம் மாணவன் "எனக்கும் உளியும் சுத்தியலும் வேண்டும்" என்றான். அவன் அந்தப் பாறையில் காந்தியின் படத்தை வரைந்து, தேவையில்லாத பகுதிகளை உளியால் செதுக்கி, அழகான காந்தியின் சிலையைச் செதுக்கினான்.

குரு மூவரையும் அழைத்துச் சொன்னார்.

"ஒரு பொருளை மறைத்தல் கல்வியல்ல"

"ஒன்றை அழிப்பதல்ல "

"படைப்பதுவே கல்வி"..என்றார்.

படைப்பாற்றல் உள்ள மாணவர்களை உருவாக்கும் கல்விமுறையும் தேர்வுமுறையும் உண்டாகக் குரல் கொடுப்போம்!!

 


6 கருத்துகள்:

  1. அற்புதமான வாழ்வியல் உண்மையைத் தந்தது கதை அருமை கவிஞரே..... வாழ்த்துகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. படைப்பாற்றல் உள்ள மாணவர்களை உருவாக்கும் கல்விமுறையும் தேர்வுமமுறையும் உண்டாகக் குரல் கொடுத்தே தீர வேண்டும் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான கதை...உங்கள் கதைகள் சுருங்க இருந்தாலும் சுருக் என இருக்கிறது...தொடருங்கள்...
    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை.
    கதைக்கு முன்னும் பின்னும் உள்ள கதைகளைக் குறைத்து, கதையைக் கூடுதலாகப் பேச வையுங்கள்.
    படங்கள் மனதைப் பிசைந்துவிட்டன. எவ்வளவு பெரிய மகத்தான மனிதரின் சிலையை எத்தனை இழிவாக நடத்திவிட்டனர்! வரலாற்றுப் பிழைகளை வரலாறு மன்னிக்காது!

    பதிலளிநீக்கு
  5. தென்கச்சி இக்கதையினை வேறு நிரலில் சொல்லியுள்ளார். அதை “எது கல்வி?“ என்னும் கருத்தோடு பொருத்தி வழங்கிய பாங்கு அருமை.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...