அலையும் குரல்களில் அதிரும் உணர்வுகள் { நூல் விமர்சனம் }
அலையும் குரல்கள்-நூல் மதிப்புரை
ஒவ்வொரு காலத்திலும் ஏதேனும் ஒரு பிரச்சனை மையம் கொண்டு, தமிழகத்தைப் பரபரப்பாக்கும். ஹிந்தி எதிர்ப்பும்,ராஜீவ்காந்தி படுகொலையும்,ஈழ இனப் படுகொலையும் தமிழகத்தில் அவ்வப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.இன்று மது எதிர்ப்பு மையம் கொண்டு அரசியலிலும்,சமூகவியலிலும் மாற்றங்களுக்கான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மிகையல்ல!.அய்யா சசிபெருமாளின் இறப்பு,நந்தினி போன்ற மாணவர்களின் தொடர் போராட்டங்கள்,அரசியல் வாக்குறுதிகள் போன்றன மது ஒழிப்புக்கான போரை வேகப்படுத்தியிருக்கின்றன!.அந்த யுத்த களத்திற்கான கூர்வாளாக 'அலையும் குரல்கள்'கவனம் பெறுகிறது!
மது அரக்கனால் சீர்குலைந்த குடும்பப் பெண்களின் கோபக் குரல்கள் ஒன்றிணைந்தால் எவ்வளவு வெப்பம் வருமோ, அந்த வெப்பம் கவிதைகளைப் படிக்கும்போது நமக்குள் ஊடுருவுகிறது!
"வெற்றுச் சொல்லடுக்கி நீர் சொறிந்த பாட்டெல்லாம் போதும்!" என்று கவிஞர் காசியானந்தன் சமூகப் பொறுப்பற்ற கவிஞர்களைக் காய்வார். காசி அனந்தனின் காத்திரம் நீலாவின் கவிதைகளிலும் தெறிக்கிறது!
கள் குடித்தல் என்பது சங்ககாலம்தொட்டு,தமிழர்களின் வாழ்க்கையில் அங்கமாகவே இருந்த ஒன்று.எப்போது அது சமூக விஷமாக மாறியது என்பதனை,
"மது தாத்தாவிடம்
மருந்தாக இருந்தது
அப்பாவிடம்
விருந்தாக இருந்தது
மகனிடம்
விஷமாக இருக்கிறது."
என்ற கவிதையில் தமிழ்ச் சமுதாயத்தில் மருந்தாக இருந்த மது, இன்று விஷமாக மாறிய வேதனை வெளிப்படுகிறது!
' பாரம்பர்யம்' என்ற கவிதையில்,
"நம் காவல் தெய்வம்
அய்யனாருக்கு
கடா மார்க் சுருட்டும்
ஒருமிடறு சாராயமும்
பிரசாதம்...! "
என்று தொடங்கி,கிராம மக்களின் அன்றாடக் குறியீடுகளில் ஒன்றான கள்ளும் சாராயமும் படிப்படியாக சாபக்கேடான கதை,கவிதையாக வெளிப்படுகிறது.
'தாயே' என்ற கவிதையில்
'உன்னோடு பேச ...ஓரிரு
........................................................
ஒரு கோப்பை திரவத்திற்கு
வழி செய்து விடு...!
என்று தாயிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டுக் கெஞ்சும் குடிமகனின் அவலம் தெரிகிறது!
'பந்தம்' கவிதை, இறந்த தாயின் ஈமச் சடங்கைக்கூடச் செய்யமுடியாமல் போதையில் தடுமாறும் குடிமகனின் கொடூரம் நம் மனசை ஏதோ செய்கிறது!
"பிணத்தோடு தூக்கிவந்து
அருகமர்த்தி
யாரோ கொள்ளிச்சட்டி
உடைக்க
யாரோ மௌனமாய்
விசும்ப
யாரோ தீப்பந்தம்
திணிக்க
யாரோ கைப்பிடித்து
சிதையில் வைக்க
தாயின் கடைசி முகம்
பாராமலே
தாய்ப்பந்தம் அறுக்கிறான்
போதை தெளியாத மகன்!"
படிப்படியாய் நம் நெஞ்சங்களில் உஷணத்தை ஏற்றுகின்றது இக்கவிதை !
'வழி' என்னும் கவிதை வெறிநாயைக் காட்டிலும்,குடிவெறி ஆபத்தானது என்பதை வலியோடு சொல்கிறது! இன்னும் எத்தனையோ கவிதைகளில் குடியினால் பாதிக்கப்பட்டவர்களின் கோபக் குரல்கள் எதிரொலிக்கிறது! அதுவும் பெண்களின் குரலாகவே இருக்கிறது!
ஒரே பொருள் பற்றி எல்லாக் கவிதைகளும் இருப்பதாலோ என்னவோ,பிரச்சார நெடி சில இடங்களில் எட்டிப்பார்க்கிறது!
மொத்தத்தில்,கவிஞர் ஆர் நீலா 'அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரின்' குரல்களைக் கவிதைகளாக்கியுள்ளார்!
'அலையும் குரல்களின்' அதிர்வுகள், நாடெங்கும் பரவட்டும்! மது எதிர்ப்புப் போரில் இந்நூல் தவிர்க்கமுடியாத அணுகுண்டாகப் பயன்படட்டும்! வாழ்த்துகள் கவிஞரே!
அருமையான தொகுப்பி்ற்கு, அழகான மதிப்புரை (ஏதேனும் இதழுக்கு அனுப்பலாமே?) அருமை, நன்றி.
பதிலளிநீக்கு"மது தாத்தாவிடம்
பதிலளிநீக்குமருந்தாக இருந்தது
அப்பாவிடம்
விருந்தாக இருந்தது
மகனிடம்
விஷமாக இருக்கிறது."
அழகிய விமர்சனம் எடுத்துக்காட்டான விடயங்கள் அருமை கவிஞரிக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.
இன்னும் மதுவைப்பற்றி கவிதைகளும்,விழிப்புணர்வும் தேவைப்படுகிறதே என வேதனைதான்.
பதிலளிநீக்குஒரு நூல் முழுக்க மதுக்குடித்து வாந்தியெடுத்த சமூகத்தின் முடைநாற்றம்..
இந்தச்சனியனை எப்போது தலைமுழுக?
மதுவின் கொடுமையை ஒரு பெண்ணாய் இவர் பேனா சிந்திய கண்நீரை உங்கள் விமர்சன விரல்கள் சுண்டியெறிகிறது..
அவரின் குரலுக்கும்,
உங்கள் விரலுக்கும்..
வந்தனங்கள்.
அருமையான மதிப்புரை!
பதிலளிநீக்குதவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்
பதிலளிநீக்கு