வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

சிலம்புச் சோலை ..வழக்குரை காதை -ஒரு மீள்பார்வை (பகுதி 1)

  சிலம்புச் சோலை

..வழக்குரை காதை..... உடைத்து வெளிவரும் உண்மைகள் ... (பகுதி..1)

முன்னுரை 

சங்க காலத்தில் தனிப் பாடல்களில் தவமிருந்த அன்னைத் தமிழை, காவிய மாளிகையில் தனிப்பெரும் பேரரசியாக அமரவைத்த பெருமை இளங்கோவடிகளையே சாரும்!.அன்றைய தமிழ்ச் சமுதாய அரசியலை, கலையுணர்வோடு இயைந்த வாழ்வை, அறவாழ்வின் நாட்டத்தை நாம் அறியத்தரும் காப்பியம் சிலப்பதிகாரம். ஆங்கில அறிஞர் டிக்கென்ஸ்,THE TALE OF TWO CITIES' என்று ஒரு நூல் எழுதியிருப்பார்.ஆனால் ,அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  மூன்று நகரங்களின் கதையை ( முப்பது காதைகள் வழியே)  தந்தவர் நம் இளங்கோ. முப்பது காதைகளில் காவியத்தின் இதயமாக இருப்பது 'வழக்குரை காதை'ஆகும். இருபதாவது காதையான ' வழக்குரை காதை'பற்றி இங்கு காண்போம்.

 வழக்குரை காதை 

   செக்கோஸ்லோவேகிய தமிழ் அறிஞர் கமில்ஸ்வலபில் என்பார்,"சிலம்பில் வழக்குரை காதையே என் உள்ளம் கவர்ந்தது" என்று கூறியுள்ளார்.உலக இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய தேசத்தில் தன்னந்தனியாக நின்று நீதி கேட்டுச் சீறிய கண்ணகியைப் போன்ற  பெண்ணை  வேறெங்கும் காணமுடியாது! இக்காதை முழுதும் நாடகப் பாங்கிலேயே அமைக்கப்பெற்றிருக்கும்.கவிக்கூற்று குறைந்து, முழுதும் பாத்திரங்களின்   வாதப்போராகவே இருக்கும்.இக்காதையில் உள்ள 'அரசியல் இலக்கியமும்,இலக்கிய அரசியலும்' ஆராயத்தக்கன.

தென்றல் புயலானது 

      மதுரைக்காண்டத்தில் (புறம்சேரி  இருத்த காதை) கோவலன் கவுந்தியடிகளிடம்,"மதுரைக்கு எவ்வளவு தூரம் உள்ளது?"(கூடல் காவதம் கூறுமின்) எனக் கேட்டபோது, கவுந்தியடிகள் ,"மதுரைத் தென்றல் வந்தது காணீர்" என்கிறார். பக்கத்திலிருக்கும் தென்றலான கண்ணகி புயலாக மாறி, மதுரை தீக்கிரையாகப் போகிறது என்பது தெரியாமல்.

அரசும் அறமும் 

           இளங்கோவடிகளின் அரசியல்ஞானமும்,நீதி வழங்கும் முறையில் அவருக்கிருந்த தெளிவும் வழக்குரை காதையில் வெளிப்படுகிறது. அன்று அரசனே நீதிபதியாக இருந்தான்.அரசவையே நீதிமன்றமாக இருந்தது. அதுவும் குற்றவாளியே நீதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்கிற விசித்திர வழக்கு அது. அன்று தமிழர்க்கெனத் தனியே தண்டனைச் சட்டங்கள் இல்லை.திருக்குறள் மட்டும்தான் வாழ்வியல் நெறிகூறும் சட்டமாக இருந்தது. 

வழக்குகள் 

       அன்றைக்கிருந்த  நீதிமன்ற நடைமுறைகளில் சில இன்றைக்கும் பழமையின் நீட்சியாகத் தொடர்வது வியப்புக்குரியது! இன்றைக்கு வழக்குகள் பொதுவாக உரிமையியல் வழக்கு ,குற்றவியல் வழக்கு(civil/ criminal case) என வகைப்படுத்தப்படும்.

   முதல் வழக்கு, மேல்முறையீட்டு வழக்கு.(.அதாவது கீழ்நீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து,அதற்கும் மேலுள்ள நீதிமன்றத்தில் வழக்கை நடத்துதல்), மறு ஆய்வு வழக்கு(Revision) போன்றன இன்றைய நடைமுறைகளாக இருக்கின்றன.

கண்ணகியின் மறு ஆய்வு வழக்கு

       மறு ஆய்வு என்பது ஒரு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை எதிர்த்து அதே நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவதாகும். கண்ணகி பாண்டிய நெடுஞ்செழியனிடம் கொண்டுவந்த வழக்கும் அஃதே ஆகும்.பொற்கொல்லன் தன்சொல் கேட்டு, ஆராயாமல் கோவலனுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது. மன்னன் தீர்ப்பை எதிர்த்து அரசவை சென்று கண்ணகி வாதாடுகிறாள். கோவலன் களவாடினானா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; களவுக்கு இன்றைய நடைமுறையில் சிறைத்தண்டனை தான். ஆனால் அன்று வரையறுக்கப்பட்ட சட்டம் ஒன்றும் இல்லை. வள்ளுவச் சட்டம்,                            

 "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்                                          களைகட் டதனோடு நேர்"  (55௦)                                                                                

என்கிறது. இதில் 'கொலையிற் கொடியார்'..என்பது கள்வரையும் குறிக்கும் என உரையாசிரியர்கள் பலர் கூறியிருப்பினும் அது பொருத்தமானதா என ஆராயவேண்டும். ஆனால், என்ன நடந்தது?மன்னன், ஆட்டத்தைமட்டும் ரசிக்காமல்  , ஆடல் மகளிரையும்  ரசித்ததால் ஊடல் கொண்டு, அந்தப்புரம் செல்கிறாள் அரசி கோப்பெரும்தேவி. அரசியின் ஊடல் தீர்க்க அந்தப்புரம் செல்லும் மன்னனைப் பார்த்து,பொற்கொல்லன் கோவலனை அரசியின் சிலம்பு திருடிய கள்வன் என்கிறான்.

 "தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு                                                                                         கன்றிய கள்வன் கைய தாகில்                                                                                                 கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென"....        

என ஆராயாமல் தீர்ப்பு வழங்கிவிடுகிறான் மன்னன்.அமைச்சர்களைக் கலந்து ஆலோசிக்காமல்,கோவலனின் வாக்குமூலம் பெறாமல் ..மொத்தத்தில் எந்த நீதிவழங்கும் நெறிமுறைகளையும் பின்பற்றாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு அது. இதனை எதிர்த்தே கண்ணகி வழக்காடுகிறாள்.     ..நாளை வழக்கு  தொடரும்...                                           

 

6 கருத்துகள்:

  1. ஒரு ஆழமான வாசிப்பின் விளைவு மட்டுமல்ல..ஆர்வத்தின் போக்கும் தெறிக்கிறது...

    வரிகள் உங்களைப்போலவே ஓடுகின்றன..

    நிறுத்தி...இன்னும் கொஞ்சம் என் போன்றோர் விளங்க...கூறுங்கள்..
    இளங்கோவில் தோய்நத சுந்தரமே!!!

    இன்னும் எழுதுங்கள்...காத்திருக்கிறோம்...உங்கள் எண்ணப்பறவைக்கு...

    பதிலளிநீக்கு
  2. வழக்குரை காதையைச் சமகால வழக்குகளின் நடைமுறையோடு ஒப்பிட்டிருப்பது மாறுபட்ட சிந்தனை. காப்பியத்தை உள் வாங்கி ஆய்ந்து ஒப்பிட்டு எழுதியிருப்பது தங்களது எழுத்து மற்றும் சிந்தனையின் உயர்நிலையைக் காட்டுகிறது. தொடர்ந்து தாருங்கள் அய்யா! சிலம்பு பற்றி நன்கு அறிந்திருக்கும் நீங்கள் ஒவ்வொரு காதை பற்றிய கருத்து, அறிஞர்களின் கூற்று, தங்களின் பார்வை ஆகியனவற்றைத் தொகுத்து தாருங்கள் பலருக்கு உதவட்டும்!

    பதிலளிநீக்கு
  3. இலக்கிய ஆய்வுரையை இவ்வளவு சுவைபட, ஏதோ துப்பறியும் கதைபோல எழுத முடிகிறதே என்று வியக்கிறேன்.. தொடர்வேன். முழுவதும் படித்து அவசியம் கருத்துகளை எழுதுவேன் அய்யா. முதலில் எனது நெஞ்சார்ந்த பாராட்டுப் பூக்களை மகிழ்ச்சியோடு உங்களுக்குச் சூட்டி மகிழ்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. வழக்குரைகாதை பற்றிய உங்கள் ஆய்வுப்பார்வையைக் கண்டு வியந்தேன். இதுகாறும் யாரும் வழிமொழியாத கருத்துகளைத் தங்களின் கட்டுரை வழிமொழிவது, பல ஆய்வுக்களுக்கு வித்திடும் என்பதில் இருவேறு கருத்தில்லை. தங்களின் சான்றுக்குறள் படித்ததும் இந்து நாளிதழில் அப்துல்கலாம் அவர்களின் என் வாழ்வில் திருக்குறள் எனும் கட்டுரை நினைவில் வந்தது ஐயா. தற்கால பாண்டியனாய் நான் இக்கட்டுரையில் அப்துல்கலாமைப் பார்த்தேன். சமகால கொலையிற் கொடியோர் பற்றிய அவரின் தீர்ப்பினை தங்களின் மறுஆய்வு வழக்கில் பொருத்திப் பார்த்தேன்.
    நான் குடியரசுத் தலைவராக இருந்த நேரத்தில் என்னை தொந்தரவு செய்யும் விஷயங்களைப் பற்றி சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசிப்பேன். அதுபோலவே எங்களால் கொடுக்கப்படும் ஆலோசனைகளை ஒரு சட்ட முன்னோடி சரிபார்க்க வேண்டும் என்பது ஏற்பாடு.
    மரண தண்டனைப் பெற்றவர்களுடைய மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டப் பிறகு, ஏராளமான மனுக்கள் ‘கருணை மனு’க்களாக வரும். கூடவே, எனக்கு முன்னால் இருந்தவர்கள் விட்டுப்போனதும்கூட சேர்ந்துகொள்ளும். ‘ஓர் உயிரை எடுப்பதற்கு உத்தரவு போட என்னால் முடியாது’ என்று நான் சொல்வதை, எனது நண்பர்கள் எதிர்ப்பார்கள். ‘கொலை குற்றம் புரிந்தவர்களை; அதுவும் குழந்தைகளை, பெண்களைக் கொன்றவர்களை எப்படி நீங்கள் மன்னிக்க முடியும்?’ என்பார்கள்.
    ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. தூக்கு தண்டனை ஏன் கூடாது என்பதைப் பற்றி ஒரு முக்கியமான சட்ட பிரமுகருடன் ஆலோசித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்னுடன் இருந்த எனது செயலாளர் பி.எம்.நாயர், அந்த சட்ட பிரமுகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‘கொலை குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அந்தக் குற்றம் மேலும் மேலும் வளர்ந்து நம்மையும் நம் மக்களையும் பாதிக்கும்’’ என்பது அவருடைய வாதம்.
    என்னுடைய விருப்பம் என்னவென்றால், குற்றம் புரிந்தவர்களுக்கு திருந்தி வாழ மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து, அவர்களுக்கு நல்ல சிந்தனைகளையும் வழங்கி, மீண்டும் தன் மக்களோடு சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஆகும். - டாக்டர் அப்துல்கலாம்.
    அப்துல்கலாமின் பார்வை தங்கள் கட்டுரையில் படர்வதைக் கண்டுற்றேன். வியந்தேன். அருமை ஐயா. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அன்று அரசவையே நீதி மன்றமாகவும் இருந்தது உண்மை...
    தொடர்கிறேன் கவிஞரே

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...