வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

வழக்குரை காதை .( பகுதி..2)..வழக்கு தொடர்கிறது...

ஏன் பாண்டியன் அப்படிச் செய்தான்..?

    பொற்கொல்லன் சொல்லையே உறுதியாக ஏற்று  பாண்டியன் கோவலனைத் தண்டித்தது ஏன்.? "வினை விளை காலம்"..அதாவது விதி என்கிறார் இளங்கோ. நுட்பமாகப் பார்த்தால், இளங்கோ என்ற சமணத்துறவிக்கும், ஆளுமைமிக்க கவிஞருக்கும் இடையே உள் நடக்கும் மோதல், காப்பியம் முழுமைக்கும்  எதிரொலிக்கிறது. எங்கெல்லாம் கதைப் போக்கில் திருப்பம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம்,சமணத்தின் அடிநாதமான 'ஊழ்' வெளிப்பட்டுக் கதையை  இயக்குகிறது.அதையும் தாண்டி கவிஞனின் ஆளுமை, சமணக் கோட்பாடுகளை மீறி பெண்மையை உயர்த்துகிறது; புரட்சி செய்யவைக்கிறது.

 வழக்கின் சிக்கல்கள் 
         * பாண்டி மாதேவியின் சிலம்புகளில் காணாமல்போனது ஒன்று. (அதைக் களவாடியன் பொற்கொல்லன்) கோவலன் கையிலிருந்து கைப்பற்றப்பட்டதும் ஒரு சிலம்பே. ஏன் கோவலன் , கண்ணகியின் இரண்டு சிலம்புகளில் ஒன்றை மட்டும்  விற்க வந்தான்?.கதையில் காரணம் சொல்லப்படவில்லை.
(அப்படியேசொல்லியிருந்தாலும்,இளங்கோவுக்குள் இருக்கிற  சமணத்துறவி 'விதி' என்றே சொல்லியிருப்பார்.)                 
* ஒரு வழக்கிற்கு மூவர் வேண்டும்.{ குற்றம் சொல்லுபவர், மறுப்பவர், நீதிபதி ( வாதி, பிரதிவாதி,நீதிபதி)}.இவ்வழக்கில் வாதியாகக்  கண்ணகி இருக்கிறாள்.தீர்ப்பு வழங்க வேண்டிய மன்னனே இங்கு பிரதிவாதியாக இருக்கிறான்.
*கோவலன் கொல்லப்பட்ட பின்பு, வழக்குரைப்பதால் என்ன பயன்..? மாண்ட கணவன் உயிர்பெற முடியுமா..? 
 ( இங்கேதான் இளங்கோ என்னும் ஆளுமைமிக்க கவிஞன், சமணத்துறவியைப் பின்தள்ளி ,முன்தோன்றுகிறான்.)
 பண்டைத் தமிழர்,உயிரினும் மேலாகக் கருதிய மான உணர்வு மேலோங்குகிறது. கண்ணகி தன கணவன் கள்வனல்லன் என நிரூபித்து பழி துடைக்கப் புயலாய்ப் புறப்படுகிறாள்.
நாளையும்  நீதிமன்றத்தில் ..வழக்கு தொடரும்..

5 கருத்துகள்:

  1. தொடருங்கள்
    தொடர்கிறேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. மிகச்சரியான இடத்தில் தொடரும் போடுகின்றீர்கள்.
    ஒரே நேரத்தில் படிக்கமுடியவில்லை...ஏனெனில் ஊழ் என்பீர்கள்...

    பதிலளிநீக்கு
  3. விதியை வைத்து விளையாடியது இளங்கோவா, மகா.சுந்தரா என்பதை அடுத்த பகுதி பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் போல...! அருமை அருமை!

    பதிலளிநீக்கு
  4. மிக ஆழ்ந்த வினாக்கள் ஐயா, ஆனால் தங்களின் பார்வைமையம் நோக்குகையில் எனக்கு ஏற்பட்ட ஐயம் எண்ணிலங்காதது.
    தமிழினத்து வணிகர் மரபுப்படி பொருள் காரணமாகப் புகாரை விட்டுப் பிரிந்த கோவலன்
    தன்னுடன் கண்ணகியை அழைத்துச் சென்றிருக்க கூடாது. அது வணிக மரபுக்கு மாறுபட்ட இழுக்குடைய செயல். இதனை உணர்ந்தே '' உன்னை நான் அழைத்து வந்தது வழுவுடைய செயல் '' என்பதைக் கண்ணகியிடமே கூறுகிறான் கோவலன்.
    வழுவென்னும் பாரேன் மாநகர் மருங்கு ஈண்டு
    எழுக என எழுந்தாய் என்செய்தனை ''
    அடுத்தது பொற்கொல்லனே கள்வன் என கூறியதிலிருந்து கோவலன் கள்வனல்லன் என முடிவேற்படுகிறது. பாண்டிய நாட்டுக் காவலர்க்கு கோவலன் குற்றமற்றவன் என அவனது தோற்றம் புலப்படுத்துகிறது. ஆயினும் பொற்கொல்லன் அவன் கள்வனென்று வாதிடும் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் நாம் இங்கு காணுற வேண்டும். கோவலன் சிலம்பு திருடியதைக் கூறும் பொற்கொல்லனின் கூற்று சுவைஞர்களை சமகால காவல் விசாரணையை நினைவுறுத்துகிறது. இது அக்காலம் முதல் இக்காலம் வரை நீளும் விசாரணைச் சமமின்மையை படம் பிடித்துக் காட்டுகிறது.
    கொலைக்களக்காதையில் வரும் இதுவும் ஊழ் என்றே கூறமுடியுமா அல்லது அதிகார நீதிச் சமமின்மையைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை.
    “கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும்
    துன்னிய மந்திரம் துணையெனக் கொண்டு
    வாயி லாளரை மயக்குது யிலுறுத்துக்
    கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்”
    என்று சொல்லுமிடத்தே,
    கையில் கன்னக்கோல் இல்லாமல், கொடிற்றுக் கோல் இல்லாமல்,
    தன் உள்ளத்துப் பொருந்திய மந்திரத்தின் துணையால்
    வாயில் காப்பாளர்களை உறங்கச் செய்து,
    சிலம்பைத் திருடி விட்டான் இந்தக் கோவலன் என்கிறான் பொற்கொல்லன் இத்துடன் நிற்கவில்லை.
    அரசன் அனுப்பின காவலர்களுடன்
    அவன் கோவலன் இருந்த இடத்துக்கு வருகிறான்.
    கோவலனைக் கண்ட காவாலாளர்கள்,
    அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவன் குற்றமற்றவன் என்று நினைக்கின்றனர்.
    அது கண்டு பொறுக்காத பொற்கொல்லன்,
    களவு நூல் இலக்கணங்களைச் சொல்லி,
    கோவலன் ஒரு குற்றவாளி என்று வாதாடுகிறான்.
    அவன் சொல்லும் களவு இலக்கணம்


    ”மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
    தந்திரம் இடனே காலம் கருவியென்று
    எட்டுடன்ன்றே இழுக்குடை மரபிற்
    கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது” (கொலைக்- வரிகள் -166-169)
    மந்திரமும், தெய்வமும், மருந்தும், நிமித்தமும்,
    தந்திரமும், இடமும், காலமும் கருவியும்
    என்னும் இந்த எட்டையும்
    துணையாகக் கொண்டு இந்தத் திருடர்கள்,
    கொடிய களவில் ஈடுபடுகின்றனர் என்கிறான்.
    களவின் இலக்கணம் கள்வனுக்குத் தான் தெரியும். ஆக பொற்கொல்லன் தான் கள்வன் என்பதையும் நாம் நுணுகி நோக்க வேண்டும் ஐயா.
    என்னை ஆழப்படுத்தத் தூண்டிய தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி. தொடரட்டும் தங்களின் சிலம்பு நெறிக் கட்டுரை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வழக்கை அறியத் தொடர்கிறேன் கவிஞரே...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...