வழக்குரை காதை.(பகுதி .4) உடையும் சிலம்பும் வெளிவரும் உண்மைகளும்
கண்ணகி உரைக்கும் முன் தீர்ப்புகள்
'தேரா மன்னா'..எனத் தொடங்கி ,மன்னனிடம் வாதாடும் கண்ணகி இரண்டுவழக்கின் தீர்ப்புகளை முன்வைக்கிறாள். இன்றைக்கும் நீதிமன்றில் வாதாடுவோர், முன் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளைத் தன் வழக்கிற்கு வலு சேர்க்கச் சொல்லும் நடைமுறை அன்றைக்கும் இருந்தது வியப்புக்குரியது.
தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவின் துயர்போக்கத் தன் தசையை அரிந்து கொடுத்தான் சிபிச் சக்கரவர்த்தி.
கன்றையிழந்த தாய்ப்பசுவின் துயர்போக்கத் தன் அருமைப்புதல்வனைத் தேர்க்காலிலிட்டுக் கொன்றான் மனுநீதிச்சோழன்.
சிபிச் சோழன் குறித்து சங்க இலக்கியத்தில் குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மனுநீதிச் சோழன் பற்றிய குறிப்பைச், சங்க இலக்கியமான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 'பழமொழி நானூறு' காட்டுகிறது.
"சால மறைத் தோம்பிச் சான்றவர் கை கரப்பக்
காலை கழிந்ததன் பின்றையும் மேலைக்
கறவைக்கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல்"
பெரியபுராணம் காட்டும் மனுநீதிச் சோழன்
திருவாதவூரில் மனுநீதிச் சோழன் தவமிருந்து பெற்ற பிள்ளை 'வீதிவிடங்கன்'. அவன் சிவாலயம் செல்லத் தேரேறிச் சென்றபோது, ஒரு பசுங்கன்று தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்தது. கன்று இறந்தது கண்டு மனம் பொறாத தாய்ப்பசு, அரண்மனை வாயிலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்தது. என்ன நடந்தது என வினவிய மன்னனுக்கு அமைச்சர் சொன்ன பதிலில், இன்று குற்றவாளியைக் காப்பாற்ற, வல்லாண்மை மிக்க ஒரு சாதுர்யமான வழக்குரைஞரின் வாதத் திறன் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
" வளவநின் புதல்வன் ஆங்கோர் மணிநெடுந் தேர்மேல் ஏறி
அளவில்தேர்த் தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால் இடைபுகுந் திறந்த தாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை என்றான்"
இன்றைக்கு சைரன் பொருத்தப்பட்ட வண்டிபோல் அன்று 'மணி'ஒலிக்கும் 'நெடுந்தேர்,
இன்று ராணுவ வாகனங்கள் மட்டுமே செல்லும் வழிபோல் (prohibitted area) அன்று 'அரசு உலாந்தெரு'
இன்றும் வாகன சட்டப்படி, பின்னுள்ள சக்கரங்களில் விபத்து ஏற்பட்டு இறந்தால்..அது ஓட்டுநரின் குற்றமல்ல. அன்று, கன்று 'தேர்க்கால் இடைபுகுந்து இறந்தது'.
அதனால் இளவரசன் மேல் குற்றமில்லை.அமைச்சரின் விளக்கத்தால் அமைதியடையாத அரசன், கலாவல்லபர் என்ற மந்திரியை அழைத்து, மகனைத் தேரேற்றிக் கொன்று வருக என ஆணையிடுகிறான். மந்திரியோ கன்று இறந்த இடத்தில் தான் இறக்க, மனம் பொறாத மனுநீதிச்சோழன், தானே தேரேறிச் சென்று தன் ஆருயிர் புதல்வனைக் கொல்கிறான்.
(இராமலிங்க அடிகளார் தன் 'மனுமுறை கண்ட வாசகம்'என்ற நூலிலும் மனுநீதிச் சோழன் வரலாற்றை விரிவாக எழுதியுள்ளார்.)
உடை..உடை...உடையும் சிலம்பு
இதோ நீதி மன்றத்தில் சினத்தோடு நிற்கிறாள் கண்ணகி. "கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று "என்கிறான் மன்னன்
."என் கால் சிலம்பு மணி உடை அரியே" என்கிறாள் கண்ணகி. "யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே" என்கிறான் மன்னன். சிலம்பு உடையப் போகிறது என்பதை நமக்கு முன்பே உடை..உடை...உடை என வார்த்தைகளால் காட்டுகிறார் இளங்கோ.
இதோ கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பு முன்வைக்கப்படுகிறது. அந்தச் சிலம்பைக் கண்டதும் கண்ணகியின் சீற்றம் அதிகமாகிறது. எடுக்கிறாள்; உடைக்கிறாள்; கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த மாணிக்கப்பரல்கள், வாய்மை தவறிய மன்னவனின் முகத்தில் தெறிக்கிறது.
நீதிமன்றம் நாளை கூடும்.....
நீதிக்கேட்க காத்திருக்கின்றோம்..முனைவர் பட்டம் பெற்ர உழைப்பு எழுத்தில் தெரிகின்றது அய்யா.
பதிலளிநீக்குசுந்தர் அய்யா, நேரடியாகவே நீங்கள் நடித்துக் காட்டிப் பேசுவது போலவே இருக்கிறது உங்கள் உரை நடை! அழகு! வழக்குமன்ற நிகழ்வுகள் ஒப்பீடும், அரசுலாம்தெரு விளக்கமும் அரிய சிந்தனை! (இவ்வளவு பெரிய எழுத்தும், சிபி மன்னன் வரலாற்றுச் சான்றுகளும் தேவையா? ஒருவேளை அவற்றுக்குப் பின்னர் வேலை தருவீர்களோ?) மீண்டும் தொடரும் போட்டுட்டீங்களே! உங்களைச் சின்னத்திரை இயக்குநராகச் சபிக்கிறேன்.
பதிலளிநீக்குஆஹா..என்ன அய்யா....பயங்கரமான கதை கேட்பதாய் நிறுத்துகிறீர்கள்..
பதிலளிநீக்குஅற்புதம்..அற்புதம்...
படிக்கும் பொழுது மனதை பதற வைக்கும் எழுத்து நடை கவிஞரே....
பதிலளிநீக்குதொடர்கிறேன்