ஞாயிறு, 29 ஜனவரி, 2017

தேவதைகளின் காதலன் (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வைதேவதைகளின் காதலன்

 (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வை)

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் ஒன்பதாவது நூல் 'தேவதைகளால் தேடப்படுபவன்'. செய்நேர்த்தி மிக்க நகைத்தொழிலாளி நுட்பத்தோடும் அழகோடும் ஆபரணம் செய்வதைப்போல், கவிதைகளை இயற்றியுள்ளார்.

     கவிஞரின் செய்நேர்த்தியோடு அவரின் அனுபவமும் சேர்ந்து, புதிய உணர்வனுபவத்தை நம்மையும் உணரச் செய்கிறது.

"என் அகவீணையை ஓர் அற்புதசக்தி மீட்டுகிறது. நான் சிந்திக்காமலேயே எதோ ஒன்று என் உள்ளத்தில் பேசுகிறது! அதே நான் எழுதுகிறேன்!" என்பார் மில்டன். "அடிமனசில் முகிழ்த்துப் பூத்துநிற்கும் அனுபவச் செழுமையின் சத்திய வெளிப்பாடுதான் கவிதை" என்பார் கவிஞர் பாலா.

ஒரு கவிதை எப்போது ஜெயிக்கும்..? நெருப்பு சுடுகிறது என்று எழுதினால் அதே உணர்வும் வலியும் வாசிக்கின்றவர்களுக்கும் ஏற்படுமானால் கவிஞனை முந்திக்கொண்டு கவிதை ஜெயத்துவிடுகிறது.

     "தூண்டிற் புழுவினைப்போல் -வெளியே 

               சுடர் விளக்கினைப் போல்

     நீண்ட பொழுதாக -எனது 

               நெஞ்சந் துடித்த தடீ!

என்ற பாரதியின் பாடல்,மோக வலியை நமக்கும் கடத்துகிறது. தூண்டிலில் அகப்பட்ட புழுவின் வேதனை வெளியே தெரியாது. எரியும் சுடர் விளக்கினைக் கூர்ந்து பார்த்தால் அதன் துடிப்பு தெரியும். உள்ளும் புறமும் காமத்தினால் நெஞ்சம் துடிப்பதை இதைவிட வேறு வரிகளால் (வலிகளால்) காட்டவியலாது.

       கவிஞர் தங்கம் மூர்த்தி முதல் கவிதையிலேயே அவரின் உணர்வை நமக்கும் கடத்துகிறார்.

      ..."இப்போது 

          மங்கலாய்த் தெரிகிறதெனக்கு 

          அம்மா இல்லா 

          இவ்வுலகு" 

அவரின் சோகம் நம்மையும் கவ்விக்கொள்கிறது.

  

                      கவிதை எங்கிருக்கிறது..? சொற்களிலா?  இல்லை சொற்கள் வெறும் கருவிதான். "ஓர் உண்மையான உணர்ச்சி தன்னை வெளிப்படுத்தத் துடிக்கும்போது, அது தனக்கான சொற்களைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.கவிஞன் வெறும் கருவிதான்"என்ற ஓர் அறிஞனின் கூற்று எத்தனை நுட்பமானது..?! கவிதை எப்போது பிறக்கும்..? சொற்கள் சூல் கொண்டால் கவிதை பிறக்கும்.கவிஞன் சொற்களைக் கைப்பற்ற என்னபாடு பட்டிருப்பான்? இதோ கவிஞரின் 'கவிதைக்கு மிக அருகில் சில சொற்கள்' கவிதையைப் பாருங்கள்.

         .....அகப்படாமல் 

              சட்டெனப் பறந்து விடுகின்றன 

              சில சொற்கள் 

             பலமுறை விரும்பி 

             பணிந்தழைத்தும்

             வரமறுக்கின்றன 

              சில சொற்கள் 

              ....................................................

              சுடரேற்றும் தருணத்திற்காகத்

              தவமிருக்கின்றன 

             எல்லாச் சொற்களும் 

இக் கவிதைத் தொகுதி எங்கிலும் தேவதைகளும் சாத்தான்களும் நிலவும் கனவுகளும் வந்து வந்து போகின்றன.

  கனவுகள் நிறமற்று இருக்கின்றன. விபத்துக்குள்ளாகின்றன.

          அடிபட்டும் மிதிபட்டும் 

          துயரச் சாக்கடையில் மூழ்கி  

          மேலெழ இயலாமல்

           மூச்சடங்கிக் கிடக்கின்றன.

           பல இரவுகளை

           தின்று செரிக்கின்றன கனவுகள்.

கவிஞரின் கண்துயிலா இரவுகள் கவிதையாகின்றன.       

            உருவமற்ற பறவைபோல் 

             நீ பின்தொடர்வதை 

             உணர்கிறேன் 

             ............................

            என்னுள் மெல்ல நுழைகிறாய் 

            உருவமற்ற பறவையாய் 

   உருவமற்ற பறவை பின்தொடர்வதும் உள்நுழைவதும் புதிய தரிசனங்கள். அகவெளியில் நாம் உணர்ந்த பிம்பங்கள் காட்சியாகின்றன.

கவிஞர் மேத்தா 'நாய்நாடு' என்ற கவிதையில் 

             இது  நாய்களின் பொற்காலம் 

             சிறந்த நாய்களுக்கு விருதளிபோம் 

            சீறும் நாய்களுக்கு விருந்தளிபோம் 

            செத்த நாய்களுக்.கு சிலை திறப்போம் !

            ராஜ நாய்களுக்கு ரசிகர் மன்றம் வைப்போம் !

           நாய்களின் சேவை நாட்டுக்கு தேவை !

 கவிஞர் தங்கம் மூர்த்தியின்'நாய்கள்' கவிதையோடு இணைத்துப் படியுங்கள்.

       நாய்களைப் பற்றிய 

       கவிதைகள் பெரும்பாலும் 

       நாய்களைப் பற்றியதாய்

       இருப்பதில்லை .

மேத்தா தேசத்து நாய்களைப் பற்றிக் கவலைப் படுகிறார். கவிஞர் தங்கம் மூர்த்தி தெரு நாய்களைப் பாடுகிறார்.

          எங்கள் தெருவில் 

         வேலைவெட்டியின்றித் திரிகின்றன பல நாய்கள் .

         என் எலும்புத்  துண்டுகளைக் 

          கடித்து 

          என்னையே கடிக்க 

           முனைகின்றன .

            நாய்களோடு வாழவும் 

            பழகிக்கொள்ள வேண்டிருகின்றது.

மற்றொரு 'உயர்திணை' கவிதையில் ஆறறிவு நண்பன் விலகி நடக்கிறான்;மீன்களும்,பறவைகளும்,செடிகளும்,செல்லப்பிராணிகளும் வாஞ்சை காட்டுவதைக் காட்சிப்படுத்துகிறார். உணர்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் 'நறுக்' கவிதை நினைவிலாடுகிறது.

            வேலைக்காரன் மேல் 

             பாய்ந்தார் ........

             நாயே !பீட்டரை கவனித்தாயா ?

             இவர் வீட்டில் 

             பீட்டர் என்றால் 

             நாய் .

             நாய் என்றால் 

             மனிதன் .

தன்னுணர்ச்சியைப் பாடாத கவிஞனே இல்லை .அவை மூளையை விட இதயத்திதிற்கும் ,அறிவைவிட உணர்ச்சிக்கும் விருந்தாகின்றது .கவிதையில் உணர்ச்சிகள் விளக்கப்படக்கூடாது; உணர்த்தப்படவேண்டும். கவியரசரின் தன்னுணர்ச்சிப் பாடல்களில் துக்கம்,அனுபவம்,கனவு, ஆசை, சோகம் இவையெல்லாம் இழைந்தோடும்.

                            நானிடறி வீழ்ந்த இடம் 

                           நாலா யிரம்அதிலும் 

                           நான்போட்ட முட்கள் பதியும் 

                           நடைபாதை வணிகனென 

                           நான்கூறி விற்றபொருள் 

                           நல்லபொருள் இல்லை அதிகம் 

                          ஊர்நெடுக என்பாட்டை

                          உளமுருகப் பாடுகையில்                                                                                    ஓர்துயரம் என்னுள் வருமே !

                          உதவாத பாடல் பல

                          உணராதார் மேற்பாடி 

                          ஓய்ந்தனையே பாழும் மனமே ! 

என்ற கவியரசரின் வரிகள் தன்னுணர்வின் உச்சம்!. 

                  "ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன் 

              காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

               ..................................................................................................

              பார்த்ததும் கோடி பட்டது  கோடி 

              சேர்த்தது என்ன ?சிறந்த அனுபவம்"" 

கவியரசரின் வலிகள் தந்த வரிகள் எத்தனை உன்னதமானவை..!!!

கவிஞர் தங்கம் மூர்த்தியின் 'நான்' கவிதை உணர்வின் உச்சம். அவரின் மற்றைய கவிதையிலிருந்து இக்கவிதை வேறுபட்டு,உயர்ந்து நிற்கிறது. கவியுள்ளம் அழுதாலும்,சிரித்தாலும்,சினந்தாலும்,தளர்ந்தாலும் இலக்கியம் பிறக்கும் என்பதற்கு இக்கவிதை ஒரு சான்று.

               நான்  /இரவுகளில் /அழுததுதான் /அதிகம் .

               என் இன்பமெல்லாம் /அரைநொடியில் /முடியும்.

                என் கனவுகளில் /பிசாசுகளே /திரியும்.

                என் பூங்காவில் /பாம்புகளே /நெளியும்.

                ............................................................................................

               நான்/ சாத்தான்கள்/ விளையாடும்/ மைதானம்

               என் சாதனையின் /கதை முழுதும் /அவமானம்.

               ....................................................................................................

              சுடும்/ பாலைவன /நெடுமாணலில்/ நான் வசிப்பேன்.

              கவி / படைப்பதனால்/ வாழ்க்கையினை/ ஜெயப்பேன்.

இந்தக்கவிதையில் ஒரு மரபிற்கான ஓசை நயம் துள்ளி வருவதை உணரலாம்

"சுய விமர்சனத்தில் தொடங்கி,சுய தரிசனத்தில் முடிந்திருப்பது சிறப்பு"என்று மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் இக்கவிதை பற்றிப்பேசிய சொற்கள் நுட்பமானவை.

               என் கண்ணீர்த் துளிகள் 

               என் எழுது கோலின் 

                வழியாக  சிந்துகின்றன.

                உலகம் அதைக் கவிதை என்கிறது.

                கண்ணீரால் கவிதை கர்ப்பமடைகிறது.

என்ற கவிக்கோவின் வரிகள் இங்கு நோக்கத்தக்கது.

'சிரிக்கும் கோப்பைகள்' கவிதை மேத்தா அவர்களின் 'செருப்புடன் ஒரு பேட்டி', வாழைமரம்' கவிதைகளின் அடுத்த பரிமாணம் எனலாம்.

  (தொடரும்)              

  

 

         

          

11 கருத்துகள்:

 1. புத்தக விமர்சனங்களோடு எங்கு கிடைக்கும் அல்லது பதிப்பக முகவரியினை சேர்த்து எழுதுங்கள். வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உதவிடும்

  பதிலளிநீக்கு
 2. அற்புதமான அலசல் கவிஞரே தொடர்கிறேன் மேலும்...

  பதிலளிநீக்கு
 3. அழகு எழுத்தெல்லாம்..
  அகத்தினிலே மறைத்துவிட்டு..
  உரை வீசக்கிளம்புகிறீர்...

  இது போல பல எழுதி..
  ஆங்காங்கே நட்டு வைத்தால்..
  விட்டிடாது..தமிழுலகம்...
  தகை சான்றீர் அறிவீரோ?

  பதிலளிநீக்கு
 4. நூலினை எங்கு எப்படிப் பெறலாம் என்பதைத் தெரிவித்தால் பயனுள்ளதாகஇருக்கும் நண்பரே
  விமர்சனம்அருமை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 5. இன்றைய வீதி இலக்கிய கூட்டத்தில், இந்த நூலினைப் பற்றிய உங்களுடைய விமர்சனத்தினை நேரிலேயே கண்டு ரசித்தேன் அய்யா. குரல்வளம், உடல் மொழி, வாசித்தலில் ஒரு ஏற்ற இறக்கம் உங்கள் பேச்சில் நான் கண்ட சிறப்புகள். “புதுக்கோட்டையில் ஒரு பட்டிமன்றக் கவிஞர், ஒரு பட்டிமன்ற சிறப்புப் பேச்சாளர், இன்னொரு சாலமன் பாப்பையா உருவாகிறார்” - எனது வாழ்த்துகள் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. கவிஞர் தங்கமூர்த்தியின் “தேவதைகளால் தேடப்படுபவன்“ கவிதை நூல் பற்றித் தாங்கள் வீதி இலக்கியக் களத்தில் ஆற்றிய அறிமுக உரை மிகத் தேர்ந்த திறனாய்வு நிரலில் அமைந்திருந்தது. உயரங்களை நோக்கிய தங்களின் இலக்கியப் பயணம் தொய்வின்றித் தொடரவும், விரைவில் ஒரு நூல்படைப்புக் கொண்டு வரவும் இதயமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. நேர்த்தியான, ஆழமான பார்வையில். ஒவ்வொரு வரியையும்
  மென்று ,தின்று, ருசித்து, ரசித்துள்ளீர்கள்.ரசனையான விமர்சம் அய்யா.

  பதிலளிநீக்கு
 8. தான் உள்வாங்கி அனுபவித்து மகிழ்ந்த கவியின்பத்தை அழகாக வார்த்தைகளில் வடித்தளித்தமை சிறப்பு.
  தகுந்த மேற்கோள்களுடன் ஒப்பீடு மிகவும் நேர்த்தி.
  வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...